பட்டமா? பட்டாக்கத்தியா? தடம் மாறும் மாணவர்கள்...!

0 254

சென்னையில் ஓடும் பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இரு தரப்பினர் மோதிக் கொண்டதும், சாலையில் இறங்கி ஓடிய மாணவனை சக மாணவர்கள் பட்டாக்கத்தியால் ஓட ஓட வெட்டியதும் பொதுமக்களை அச்சத்தில் உறைய வைத்தது. 

பிராட்வேயில் இருந்து பூந்தமல்லி நோக்கி சென்ற மாநகரப் பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பயணித்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அரும்பாக்கத்தை கடந்த பேருந்து சென்றுகொண்டிருந்த போது மாணவர்களுக்குள் மோதல் வெடித்தது.

அப்போது ஒரு தரப்பு மாணவர்கள், மறைத்து வைத்திருந்த பட்டாக் கத்திகளை எடுத்துக் கொண்டு, மற்றொரு தரப்பை தாக்கத் தொடங்கினர். இதனால் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அலறினர். பேருந்து சாலையிலேயே நிறுத்தப்படம், பின்னால் வந்த வாகனங்களும் நிறுத்தப்பட்டது. ஆயுதங்களுடன் இருந்த கும்பலைப் பார்த்து அஞ்சி மற்றொரு கும்பலைச் சேர்ந்தவர்கள் பேருந்தை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

சாலையில் இறங்கி ஓடிய மாணவர் ஒருவரை விரட்டி விரட்டி பொதுமக்கள் முன்னிலையில் பட்டா கத்தியால் தாக்கினர். மேலும் பேருந்துக்குள் இருந்த எதிர்கும்பலைச் சேர்ந்த சிலரையும் அந்தக் கும்பல், தாக்கியதால் பயணிகள் பதற்றம் அடைந்தனர். ஆயுதங்களை ஏந்தியபடி சாலையில் அங்கும் இங்கும் ஓடியதை பார்த்து பொதுமக்கள் பீதி அடைந்தனர். 

தகவல் அறிந்து போலீசார் செல்வதற்குள், பட்டாக் கத்திகளுடன் அந்த மாணவர்கள் தப்பிச் சென்றனர். பேருந்தில் இருந்த சில மாணவர்களைப் பிடித்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தாக்குதலில் வசந்த் என்ற இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் படுகாயமடைய அவரை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

பட்டப் பகலில், நட்ட நடுரோட்டில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த அட்டகாசம் அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இதனிடையே கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்திய காவல் துறையினர் ரூட் தல பிரச்சனை தான் இந்த மோதலுக்கு காரணமெனவும், தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

சென்னையில் உள்ள கல்லூரிகளில் ஒரு சில தனியார் கல்லூரி மாணவர்கள் தவிர்த்து, அரசு மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் நிகழ்வு தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. வெவ்வேறு கல்லூரி மாணவர்களிடையே நடக்கும் மோதல், பேருந்து தினம் என்ற பெயரில் அரசு பேருந்தை சிறைப்பிடித்து செய்யும் அட்டகாசம் என மோதலில் ஈடுபட்டும் வரும் மாணவர்கள், ரூட் தல பிரச்சனையால் ஒரே கல்லூரி மாணவர்களாக இருந்தாலும் இது போன்று மோதிக்கொள்கின்றனர்.

ஒரு குழுவினர் செல்லும் பேருந்தில் மற்றொரு குழுவினர் செல்லக்கூடாது என்ற அர்ப காரணங்களுகாக தான் இந்த மோதல் நடப்பதாக காவல் துறையினர் சுட்டிக் காட்டுகின்றனர். தற்போதெல்லாம் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் படித்து பட்டம் பெற புத்தகம் கொண்டு செல்கிறார்களோ இல்லையோ, கட்டாயம் அந்த குழுவில் பட்டாக்கத்தி கொண்டு செல்கின்றனர் என பொதுமக்கள் புலம்பி செல்கின்றனர்.

எந்த கல்லூரி சிறந்தது என படிப்பில், விளையாட்டு உள்ளிட்ட மற்ற கலை திறமைகளின் மூலம் நிரூபிக்க எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும், எங்க கல்லூரி தான் கெத்து என்று அடிதடி, வெட்டு, குத்து மூலமே நிறுவ முயன்று வருகின்றனர் மாணவர்கள்.

இதனிடையே, மாணவர் ஒருவரை அரை நிர்வாணமாக்கி, சிலர் மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன. அந்த வீடியோவில், அரை நிர்வாணமாக உள்ள மாணவரின் ரூட்டை அவமானப்படுத்தியும், தங்களது ரூட்டை பெருமையாகவும் பேசி எழுதும் படி சிலர் தாக்குவது பதிவாகி உள்ளது.

ரூட்டு தல குறித்த பிரச்சனையை தொடர்ந்து, இந்த வீடியோ வெளியாகி இருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இவர் எந்தக் கல்லூரியைச் சேர்ந்தவர் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீடியோ தொடர்பாக மாணவர்களிடையே குழு மோதல் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கருதும் போலீசார், வீடியோவில் உள்ள மாணவர் தொடர்பாக் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கல்லூரி நிர்வாகங்களை அறிவுறுத்தி உள்ளன. 

இதனிடையே, மாணவர் ஒருவரை அரை நிர்வாணமாக்கி, சிலர் மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வேகமாகப் பரவி வருகின்றன. அந்த வீடியோவில், அரை நிர்வாணமாக உள்ள மாணவரின் ரூட்டை அவமானப்படுத்தியும், தங்களது ரூட்டை பெருமையாகவும் பேசி எழுதும் படி சிலர் தாக்குவது பதிவாகி உள்ளது.

ரூட்டு தல குறித்த பிரச்சனையை தொடர்ந்து, இந்த வீடியோ வெளியாகி இருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இவர் எந்தக் கல்லூரியைச் சேர்ந்தவர் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வீடியோ தொடர்பாக மாணவர்களிடையே குழு மோதல் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக கருதும் போலீசார், வீடியோவில் உள்ள மாணவர் தொடர்பாக் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கல்லூரி நிர்வாகங்களை அறிவுறுத்தி உள்ளன.

இந்த நிலையில் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் அருள்மொழிச் செல்வன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒழுங்கீன நடவடிக்கைகளில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். மோதல் சம்பவம் குறித்து விசாரிக்க கல்லூரி நிர்வாகம் சார்பில் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், கத்தியுடன் மோதலில் ஈடுபட்ட 2 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக கல்லூரி கல்வி இயக்குநர் ஜோதி வெங்கடேஸ்வரன்,மற்றும் அண்ணா நகர் துணை காவல் ஆணையர் ஆகியோர் பச்சையப்பன் கல்லூரி முதல்வரோடு ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரியின் ஆட்சி மன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாணவர்கள் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் இனி நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுப்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments