கர்நாடக சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

0 7445

கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து, குமாரசாமி தலைமையிலான கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது.  

கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் மற்றும மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள் 15 பேர் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, குமாரசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அதற்கான தீர்மானம் கடந்த வியாழக்கிழமை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்று வந்தது. 

தொடர்ந்து 4வது நாளாக நடைபெற்ற விவாதத்தில், ஆளும் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் மட்டும் பேசினர். அப்போது பேசிய அமைச்சர் சிவக்குமார், அதிருப்தி எம்எல்ஏக்கள் தனது முதுகில் குத்திவிட்டதாக வேதனை தெரிவித்தார்.


சட்டப்பேரவையில் இறுதியாக பேசிய முதலமைச்சர் குமாரசாமி, 6 கோடி கர்நாடக மக்களிடமும் தான் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக உருக்கமுடன் தெரிவித்தார். தனது பதவியை மகிழ்ச்சியுடன் தியாகம் செய்ய தயாராக இருப்பதாக அவர் கூறினார். பல நூறு கோடி ரூபாய் ஊழல் செய்து பின்வாசல் வழியாக பாஜக ஆட்சிக்கு வர முயற்சிப்பதாகவும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே குதிரை பேரம் துவங்கி விட்டதாகவும் அவர் சாடினார்.

அதனைத் தொடர்ந்து டிவிசன் எனப்படும் பகுதி வாரியாக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இரவு 7.20 மணியளவில் நடத்தப்பட்டது. அரசை ஆதரிப்போரும், எதிர்ப்போரும் எழுந்து நின்றனர்.

அரசுக்கு ஆதரவாக 99 பேரும் எதிராக 105 பேரும் வாக்களித்துள்ளதாக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ்குமார் அறிவித்தார். இதனால் 6 வாக்குகள் வித்தியாசத்தில் குமாரசாமி அரசு கவிழ்ந்தது. கர்நாடகாவில் கடந்த மே மாதம் குமாரசாமி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நிலையில், 14 மாதங்களில் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து ஆளுநர் வஜுபாய்வாலாவை சந்தித்து குமாரசாமி ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார்.

கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து பாஜகவினர் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் எடியூரப்பா, குமாரசாமி அரசால் மக்கள் சோர்ந்து போய் விட்டனர். கர்நாடக மக்களின் வளர்ச்சிக்கான புதிய சகாப்தம் தொடங்கும் என்று அவர் உறுதி அளித்தார். 

காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் இன்னும் ஏற்காமல் இருப்பதாக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெகதிஷ்ஷெட்டர் தெரிவித்தார். ராஜினாமா ஏற்கப்பட்ட பின்னர்  பாஜகவில் சேர்வதா இல்லையா என்பது குறித்து அவர்கள் முடிவு செய்வார்கள் என்று குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் தங்களுக்கு 105 எம்எல்ஏக்கள் உள்ளதால் நிலையான ஆட்சியை தர முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். 

பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் புதன்கிழமை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் எடியூரப்பா தலைவராக தேர்வு செய்யப்பட்டு, பின்னர் ஆட்சி அமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் மும்பையில் நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள அதிருப்தி எம்எல்ஏக்கள் 15 பேரும் புதன்கிழமை கர்நாடகம் வர இருப்பதாக கூறப்படுகிறது. 

இதற்கிடையே முன்னெச்சரிக்கையாக பெங்களூரு மாநகரம் முழுவதும் புதன்கிழமை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் அலோக் குமார் தெரிவித்தார். மதுக்கடைகளை வரும் 25 ஆம் தேதி வரை மூடவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதனிடையே, கர்நாடகாவில் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ள எடியூரப்பா இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்கிறார். கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மை ஆதரவை இழந்து கவிழ்ந்ததையடுத்து பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷாவுக்கு எடியூரப்பா ஒரு கடிதம் எழுதியுள்ளார். இதில் பாஜக அரசு அமைய உள்ளதற்கு மனதார வாழ்த்துகளை தெரிவிப்பதாக எழுதியுள்ள எடியூரப்பா, குமாரசாமிக்கு எதிராக வாக்கெடுப்பில் பாஜகவுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்நிலையில் கர்நாடக பாஜகவினர் கடந்த சில நாட்களாக சந்தித்த சோதனையில் இருந்து விடுபட்டு நிம்மதியடைந்துள்ளதாகவும் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள எடியூரப்பா இன்று டெல்லி செல்கிறார். பிரதமர் மோடியை சந்தித்து அவருடைய ஆசியுடன்  ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக எடியூரப்பா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.இதனிடையே நேற்று மாலை பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நட்சத்திர ஓட்டலில்  நடைபெற்றது. அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. பாஜகவினர் உற்சாக நடனம் ஆடினர்

 
இன்று காலை 11 மணிக்கு பெங்களூரில் மீண்டும் பாஜக எம்.எல்.ஏக்கள் கூடி முதலமைச்சராக எடியூரப்பாவை தேர்வு செய்ய உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments