மேட்டூர் அணைக்கான நீர் வரத்து கிடுகிடு உயர்வு

0 2236

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் விநாடிக்கு 7000 கன அடி வீதம் மேட்டூர் அணையை வந்தடைகிறது. இதனிடையே திறக்கப்படும் தண்ணீரின் அளவை 11 ஆயிரம் கன அடியாக கர்நாடக அரசு அதிகரித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பாசன மற்றும் குடிநீர் தேவைகளுக்காக கடந்த 17 ஆம் தேதி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 885 கன அடி வீதமும், கபினியில் இருந்து வினாடிக்கு 500 கன அடி வீதமும், தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த 19-ஆம் தேதி அன்று கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 2511 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதே போன்று கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2500 கன அடி  வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் மூலம் வினாடிக்கு 5511 கன அடி வீதம் தண்ணீர் காவிரியில் பாய்ந்தது. இதனைத் தொடர்ந்து 8300 கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த தண்ணீர் இப்போது மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்துள்ளது. காலையில்  வினடிக்கு 1500 கன அடி வீதமாக இருந்த நீர்வரத்து பிற்பகலுக்குப் பின் வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதமாக உயர்ந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில் காவிரியில் நீர் திறப்பை கர்நாடக அரசு அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 6019 கன அடி வீதமும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5000 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காவிரியில் 11,019 கன அடி வீதம் தண்ணீர் பாய்கிறது. கூடுதல் தண்ணீர் வருவதால் ஒகேனக்கல் அருவிகள் ஆர்ப்பரிக்கத் தொடங்கி உள்ளன.

கர்நாடகம் திறந்துள்ள கூடுதல் தண்ணீர் காவிரியில் தொடர்ந்து வரும் பட்சத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments