குடியால் சிதைந்த குடும்பம்

0 3296

மதுரை திருமங்கலத்தில் தனியார் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியையின் கணவன் குடும்பத்தார் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திங்கட்கிழமையன்று திருமங்கலம் பிகேஎன் நாடார் பள்ளிக்குள் கத்தியை மறைத்தவாறு புகுந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த குருமுனீஸ்வரன், அங்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த தனது மனைவி ரதிதேவியை மாணவர்கள் கண்முன்னே கத்தியால் சரமாரியாகக் குத்திக் கொன்றார்.

குருமுனீஸ்வரனை போலீசார் கைது செய்த நிலையில், ரதிதேவியின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் குருமுனீஸ்வரனின் தந்தை, தாய், சகோதரிகள், அவரது கணவர் உட்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

டிப்ளமோ படித்துவிட்டு சென்னையில் பொறியாளராகப் பணியில் இருந்த குருமுனீஸ்வரனுக்கு கல்லூரி காலத்தில் இருந்தே மதுப் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனை ரதிதேவியின் குடும்பத்தாரிடம் மறைத்து அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது.

திருமணம் ஆனது முதலே குருமுனீஸ்வரன் குடித்துவிட்டு வந்து ரதிதேவியை அடித்து துன்புறுத்தி வந்ததாகவும் அவரது கொடுமை தாங்க முடியாமல் தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறு பெற்றோரிடம் ரதிதேவி கூறியதாகவும் அவரது சகோதரர் கூறுகிறார்.

ரதிதேவி தன்னுடன் வரமறுத்ததால் அவரை குருமூர்த்தி கொலை செய்ததாகக் கூறப்படும் நிலையில், ரதிதேவி குறித்து குருமுனீஸ்வரனிடம் தவறான தகவல்களை சொல்லி கொலை செய்ய தூண்டுதலாக இருந்ததாக அவரது குடும்பத்தார் 7 பேர் மீது ரதிதேவியின் குடும்பத்தார் புகாரளித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே வெளிநபர்களை முறையாக சோதனை செய்து உள்ளே அனுமதிக்காமல் அலட்சியமாக இருந்ததாக பள்ளி நிர்வாகத்தின் மீது மாணவர்களின் பெற்றோர் புகார் கூறுகின்றனர். கொடூர கொலை சம்பவத்தை நேரில் பார்த்ததால் தங்கள் பிள்ளைகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments