கிராம வங்கிகளில் பெற்ற கடன்களில் 99 சதவீதம் திருப்பி செலுத்தப்படுகிறது என முதலமைச்சர் பெருமிதம்...

0 513

முதலமைச்சருக்கு கடன் கொடுக்கவே வங்கிகள் செக்யூரிட்டி கேட்கும் நிலையில், தமிழ்நாடு கிராம வங்கி, சுயஉதவிக் குழுக்களுக்கு 20 லட்சம் ரூபாய் வரை செக்யூரிட்டி கேட்காமல் கடன்கொடுப்பதாக எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார். கிராம வங்கியின் வாராக்கடன் அளவு குறைவாக இருப்பது, சாமானிய மக்களின் நேர்மைக்கு மிகச்சிறந்த சான்று என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

சேலத்தில் வனவாசி அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களின் வசதிக்காக தாரமங்கலம் - மேட்டூர் வழிதடத்தில் புதிய பேருந்து சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வனவாசியில் புதியதாக துவங்கப்பட்டுள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவியர் கல்லூரிக்கு சென்று வர பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, புதிய வழித்தடத்தில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சேலத்தில் தமிழ்நாடு கிராம வங்கியின் மாநில அளவிலான மாபெரும் வங்கிக்கடன் வழங்கும் விழாவிலும் முதலமைச்சர் பங்கேற்றார். இந்த விழாவில் மாநிலம் முழுவதும் இருந்து கலந்து கொண்ட 31 ஆயிரத்து 406 பயனாளிகளுக்கு 112 கோடி ரூபாய் மதிப்பிலான விவசாய பயிர் கடன், பண்ணை நில மேம்பாடு, விவசாய பண்ணை கருவிகள் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாடு கிராம வங்கிக்கு வாராக்கடன் அளவு 1.79 விழுக்காடு மட்டுமே என்பது பெருமைக்குரிய விஷயம் என்றார். தமிழ்நாடு கிராம வங்கி விவசாயிகளுக்கும், சுயஉதவிக் குழுக்களுக்கும், ஏழை எளியோருக்குமே கடன் வழங்கி வருகிறது என்றும், இந்த வங்கியின் வாராக்கடன் அளவு குறைவாக இருப்பது, சாமானிய மக்களின் நேர்மைக்கு மிகச்சிறந்த சான்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments