கிராமியக் கலைகளில் அசத்தும் கல்லூரி மாணவர்கள்

0 482

கோவையில் கிராமிய கலைகள் மீது தீராக்காதல் கொண்டுள்ள கல்லூரி மாணவர்கள், அதனை பல்வேறு இடங்களிலும் அரங்கேற்றி வருவதோடு, ஆர்வமுள்ளவர்களுக்கு கற்றுக்கொடுத்தும் வருகின்றனர்.

இசையால் வசமாகாத இதயம் இல்லை என்பார்கள். தமிழர்களைப் பொறுத்தவரையில் மகிழ்வான தருணமோ, துக்கமான தருணமோ எல்லா தருணங்களிலும் அவர்களுடன் இசையும் பாட்டும் ஆட்டமும் உடன் பயணித்து வந்திருக்கிறது. நம் வாழ்வோடு இரண்டறக் கலந்திருந்த பாரம்பரிய நாட்டுப்புற இசையும் நடனமுறைகளும் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு முறையாக கடத்தப்படவில்லை என்பது பெரும்பாலான இசைக்கலைஞர்களின் ஆதங்கமாக இருக்கிறது.

அப்படிப்பட்டவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் கோவை ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் சிலர் ஒன்றிணைந்து நாட்டுப்புறக் கலைகளை ஆர்வத்துடன் கற்று, ஆர்வமுள்ளவர்களுக்கு அதனை பயிற்றுவித்தும் வருகின்றனர். கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் உள்ளிட்டவையோடு, பாட்டும் பறையிசையுமாக அசத்துகின்றனர் மாணவர்கள்.

குழுவில் இருக்கும் மாணவர்கள் அனைவருமே இருபது வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற நிலையில், கலை மீதான அவர்களது ஆர்வமும் அக்கறையும் ஈடுபாடும் வியப்பை ஏற்படுத்துகிறது. இந்தக் கலைக்குழுவை முன்னின்று ஒருங்கிணைத்துச் செல்லும் வேதியியல் 2ஆம் ஆண்டு மாணவர் கலையரசன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் நடனமாடி “கலைகளின் செல்வன்” உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளதாக பெருமிதத்துடன் கூறுகிறார்.

விடுமுறை நாட்களில் ஊர் ஊராகச் சென்றும் பள்ளி, கல்லூரிகளிலும் தங்களது இசை, நடனத்தை அரங்கேற்றி வருகின்றனர் இந்த மாணவர்கள். இவ்வகை பாரம்பரிய கலைகள் மனதையும் உடலையும் பக்குவப்படுத்துவதோடு, ஆரோக்கியத்தையும் தருவதாகக் கூறும் மாணவர்கள், இளம் தலைமுறையினர் ஆர்வத்துடன் இவற்றை கற்றுக்கொள்ள முன்வர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். அவ்வாறு ஆர்வம் உள்ளவர்கள் தங்களை அணுகினால் இலவசமாக அதனை கற்றுத்தர தயாராக உள்ளதாகக் கூறும் மாணவர்களை, கல்லூரி நிர்வாகமும் பேராசிரியர்களும் ஊக்குவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாரம்பரிய கலைகளின் வழியே சமூகநீதி, சமத்துவம் உள்ளிட்டவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்லமுடியும் என உறுதியுடன் நம்பும் இந்த இளம் கலைஞர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments