ஏ.டி.எம்மில் “ஸ்கிம்மர்” பொருத்தி பணம் திருடி வந்த பல்கேரியர்கள்

0 573

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலுள்ள ஏ.டி.எம்.களில் ஸ்கிம்மர் கருவிகளை பொருத்தி, வெளிநாட்டவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து 18 லட்ச ரூபாய் வரை திருடிய பல்கேரிய நாட்டைச் சேர்ந்த மூவரை போலீசார் கைது செய்தனர். 

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் உள்ள ஹாலிடே எனும் சொகுசு விடுதியில் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த மூவர் தங்கியிருப்பதாகவும் அவர்கள் வெளியே செல்லும்போது புதுவிதமான மின்னணு கருவிகளை உடன் கொண்டு செல்வதாகவும் அவர்களது நடவடிக்கைகளும் சந்தேகத்துகிடமாக இருப்பதாகவும் கண்ணகி நகர் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

கடந்த மாதம் ஏடிஎம் எந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணத்தைத் திருடிய பல்கேரிய நாட்டைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், உஷாரான போலீசார், ஹாலிடே விடுதிக்கு விரைந்தனர். அங்கு தங்கியிருந்த பல்கேரியா நாட்டைச் சேர்ந்த லிபோமிர், (lyubomir) போரிஸ் ,(Boris) நிக்கோலே, (NIkolay) ஆகியோரின் உடமைகளை சோதனையிட்டபோது 40க்கும் மேற்பட்ட போலி ஏடிஎம் அட்டைகள், 7.5 லட்ச ரூபாய் , 10 ஆயிரம் டாலர் , போலி கார்டு தயாரிக்கும் மெஷின், லேப்டாப், செல்போன்கள், 3 சூட்கேஸ் ஆகியவை இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் ஞாயிற்றுக்கிழமை பல்கேரியா செல்வதற்கான விமான பயணச்சீட்டையும் கைப்பற்றினர்.

பல்கேரியாவில் இருந்து வந்து ஏ.டி.எம். இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவியை பொருத்திவர்கள், குறிப்பாக பல்கேரிய நாட்டவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் திருடி வந்தது தெரியவந்துள்ளது. இதுவரை 18 லட்சம் ரூபாய் வரை திருடி இவர்கள் உல்லாசமாக இருந்துள்ளனர்.

மூவரும் கைது செய்யப்பட்டு மத்திய குற்றப்பிரிவின் வங்கி மோசடி தடுப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணைக்குப் பின் மூவர் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு அது பல்கேரிய தூதரகத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments