ஏன்? ஹோர்முஸ் நீரிணை முக்கியத்துவம் வாய்ந்தது

0 1307

பெர்சிய வளைகுடாவின் ஒரு கரையில் பஹ்ரைன், ஈராக், குவைத், ஓமன், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளும், மற்றொரு கரையில் ஈரானும் அமைந்துள்ளன.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த, பாரசீக வளைகுடாவையும், அரபிக் கடலின் ஓமன் வளைகுடாவையும் இணைக்கும் குறுகிய நீர்வழி இணைப்புதான் ஹோர்முஸ் நீரிணை என அழைக்கப்படுகிறது.

90 நாட்டிக்கல் மைல்கள், அதாவது 167 கிலோமீட்டர் நீளம் கொண்டது இந்த நீரிணை. இதன் அகலம் 96 கிலோமீட்டரில் இருந்து 39 கிலோமீட்டர் வரை வேறுபடுகிறது. மிகக்குறுகலான புள்ளியில், 21 மைல்கள் மட்டுமே அகலம் கொண்ட இந்த நீரிணை வழியாகத்தான் பாரசீக வளைகுடாவில் இருந்து உலகிற்கே கச்சா எண்ணெய் சென்றாக வேண்டும்.

இந்த நீரிணைப் பகுதியில் கரையோர நாடுகளின் கடல்பரப்பும் வருவதால், வளைகுடாவில் இருந்து வரும், செல்லும் மிகப்பெரிய எண்ணெய் கப்பல்கள், மிகக் குறுகலான பகுதியில் 2 மைல்கள் என்ற குறுகிய வழியை மட்டுமே பயன்படுத்தும் நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இதனால் ஈரான் மற்றும் ஓமனின் கடல்பரப்பையும் பயன்படுத்தும் நிலை ஏற்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் மொத்த கச்சா எண்ணெயின் அளவு பிரம்மாண்டமானதாக உள்ளது. 2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து நாள்தோறும் 2.25 கோடி பேரல்கள் எண்ணெய் இந்த வழியாகச் செல்வதாக வோர்ட்டெக்சா எரிசக்தி ஆய்வு நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இது ஒட்டுமொத்த உலக உற்பத்தியில் 24 சதவீதம் ஆகும்.

உலகின் மொத்த கடல்பரப்புகளின் வழியே செல்லும் எண்ணெயில் 30 சதவீதம் ஆகும். அதாவது அமெரிக்காவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் உற்பத்தியைப்போல இருமடங்கு எண்ணெய், ஹோர்முஸ் நீரினை வழியாக டேங்கர் கப்பல்கள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த எண்ணெயில் 80 சதவீதம் ஆசிய சந்தைகளுக்கு செல்பவை ஆகும். இந்த எண்ணெய் விநியோகம் இல்லை என்றால் உலகப் பொருளாதாரம் செயல்படுவதே முடங்கும் அபாயம் ஏற்படும். அதனால்தான் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கால், ஹோர்முஸ் நீரிணையின் பக்கம் உலகின் கவனம் திரும்பியுள்ளது.

இந்த இருநாடுகளும் ஹோர்முஸ் நீரிணையை மையமாக வைத்தே பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன. ஹோர்முஸ் நீரிணைக்குள் நுழையும்போது அமெரிக்க போர்க்கப்பலுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாலேயே ஈரானின் ட்ரோன் சுட்டுவீழ்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியிருந்தார்.

ஆனால் இந்த பலப்பரீட்சை உலகிற்கு விஷப்பரீட்சை ஆகிவிடும் என்பதுதான் கவலைக்குரிய அம்சம். மோதல் போக்குகளால் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், அது உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான், கடல்பரப்பு என்றாலும், சிறுமோதல் ஏற்பட்டால்கூட வெடிக்கக் காத்திருக்கும் எண்ணெய் கிடங்கு என ஹோஸ்முக் நீரிணை வர்ணிக்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments