காவிரி விவகாரத்தில் பேரவையில் அனல்பறக்கும் விவாதம்...

0 388

காவிரியில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதில் திமுக, அதிமுகவின் பங்கு பற்றி சட்டப்பேரவையில் அனல்பறக்கும் விவாதம் நடைபெற்றது.

17 ஆண்டுகள் மத்தியில் அதிகாரத்தில் இருந்தும், தமிழகத்தின் எந்த ஒரு முக்கிய பிரச்னைகளிலும் தீர்வு காண தவறிவிட்டதாக, திமுகவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாடினார்.

சட்டப்பேரவையில், பொதுத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், "காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும், மேகதாதுவின் குறுக்கே கர்நாடக அரசு தடுப்பணை கட்டுவதை தடுத்த நிறுத்த வேண்டும், இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தர வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர், காவிரி விவகாரம் குறித்து டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்தியதாக குறிப்பிட்டார்.

மேகதாது விவகாரத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும், மேகதாதுவில் அணை கட்டினால் தமிழக விவசாயிகள் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதை ஒவ்வொரு முறையும் கடிதம் வாயிலாகவும், நேரிலும் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

உடனே, அமைச்சர் ஜெயக்குமார் தலையிட்டு, 17 ஆண்டுகாலம் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தும், முக்கிய பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றார்.

திமுக நினைத்திருந்தால், செயல்பட்டிருந்தால் காவிரி, முல்லைப் பெரியாறு, கச்சத்தீவு உள்ளிட்ட அனைத்து முக்கிய பிரச்னைகளுக்கும் தீர்வு கண்டிருக்கலாம் என்றும், அப்போதெல்லாம் விட்டுவிட்டு, இப்போது எதிர்கட்சித் தலைவர் இலவச ஆலோசனைகளை வழங்குகிறார் என்றும் ஜெயக்குமார் விமர்சனம் செய்தார்.

இதைத் தொடர்ந்து, திமுகவினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். அமைச்சரின் பேச்சுக்கு துரைமுருகன் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார். பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின், மத்தியில் ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தீர்கள் என ஜெயக்குமார் கேட்பதாக சுட்டிக்காட்டினார்.

"சுதந்திர நாளன்று கோட்டையில் முதலமைச்சர் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத் தந்தது திமுக, சேலம் உருக்காலையை கொண்டு வந்தது திமுக, அந்த ஆலையை தனியார்மயமாக்க முயன்றபோது, வாஜ்பாய் ஆட்சியில் தடுத்து நிறுத்தியது திமுக.,வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தது திமுக, சேது சமுத்திரம் திட்டத்தை கொண்டு வந்தது திமுக, என பட்டியலிட்டார்.

திமுக மத்தியில் அதிகாரத்தில் இருந்தபோது காவிரி விவகாரத்தில் என்ன செய்தது என்றுதான் ஜெயக்குமார் கேட்டதாகவும், அதை பற்றி பேசுமாறும் முதலமைச்சர் கூறினார்.

17 ஆண்டு காலம் மத்தியில் அதிகாரத்தில் பங்குவகித்தபோது, காவிரி பிரச்சனையில் திமுக உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கும் என்றும், இன்று தமிழகம் மற்றும் புதுவை மாநிலங்கள் வழக்கு போடும் நிலை வந்திருக்காது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளித்த எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், காவிரி நடுவர் மன்றம் அமைவதற்கு திமுக தான் காரணம் என்றும், எல்லா பணிகளையும் திமுக செய்தது, அரசிதழில் வெளியிட்ட சின்ன வேலையை மட்டும்தான் அதிமுக செய்தது என ஆவேசமாக கூறினார்.

மீண்டும் பேசிய முதலமைச்சர், காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு வந்த பிறகும் இரண்டு மாதம் ஆட்சியில் திமுக இருந்தது என்றும், அன்று திமுகவுக்கு இருந்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி இருந்தால் காவிரி விவகாரத்தில் தீர்வு கண்டிருக்கலாம், ஆனால் திமுக தவறிவிட்டது என்றும் குற்றம்சாட்டினார்.

பதவிகளை பெற பல முறை டெல்லிக்கு சென்ற திமுக, ஒரு முறை கூட காவிரி விவகாரத்தில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் முதலமைச்சர் குறைகூறினார்.

காவிரிக்காக தன் பதவியையே துறந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி, திமுக என்ன செய்தது என உரத்த குரலில் முதலமைச்சர் கேட்டார். உடனடியாக குறுக்கிட்ட சபாநாயகர், காவிரி விவகாரம் குறித்து பலமுறை பேசி விட்டோம் என கூறி விவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments