இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம்

0 1034

ந்தியா - ரஷ்யா இடையே ராணுவ தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இரு நாடுகளும் பரஸ்பரம் விமான, கடற்படை தளங்களை பயன்படுத்திக்கொள்ள இந்த ஒப்பந்தம் வழி வகுக்கும்.

ரஷ்யா உடனான உறவை இந்தியா மேலும் வலுப்படுத்திக் கொள்ள மோடி தலைமையிலான மத்திய அரசு மேலும் ஒரு நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.

கடந்த மாதம் மாஸ்கோவுக்கு சென்றிருந்த பாதுகாப்புத்துறை கூடுதல் செயலாளர் ஜூவேஷ் நந்தன் தலைமையிலான குழு, இந்த ஒப்பந்தத்தின் ஷரத்துகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்துள்ளது.

வருகிற செப்டம்பர் மாதம் ரஷ்யாவின் Vladivostok நகரில் நடைபெற உள்ள கிழக்கத்திய பொருளாதார அமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். இந்த மாநாட்டின் போது, மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, ராணுவ தளவாட பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளனர். 

இந்த ஒப்பந்ததின் படி இருநாடுகளும் விமானப்படை தளங்கள், துறைமுகங்கள், கடற்படை தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ள முடியும். ராணுவ தளவாடங்களை தங்கு தடையின்றி பரிமாறிக் கொள்ள முடியும். போர்க்கப்பல்கள், போர் விமானங்களுக்கு இரு நாட்டின் தளங்களில் முன் அனுமதி இன்றி எரிபொருள் நிரப்ப முடியும்.

போர் தளவாட சரக்கு போக்குவரத்தை பரஸ்பரம் மேற்கொள்ள முடியும். ராணுவ தளவாடங்கள், கப்பல், விமான உதிரிபாகங்களை பண பரிமாற்றம் இன்றி மேற்கொள்ளவும், ஆண்டுக்கு ஒரு முறை கணக்கு பார்த்து வரவு செலவை மேற்கொள்ளவும் ஒப்பந்தம் வழி வகை செய்யும்.

ரஷ்யாவிடம் இருந்து வாங்கிய பல போர்க்கப்பல்களை கொண்டுள்ள இந்திய கடற்படை, இந்த ஒப்பந்தத்தின் மூலம், உதிரி பாகங்கள், போர் தளவாடங்கள், கப்பல்களை மேம்படுத்துதல் ஆகிய பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும்.

இருநாடுகளும் இணைந்து விமான மற்றும் கடற்படை போர் பயிற்சிகளை அடிக்கடி மேற்கொள்ள ஒப்பந்தம் வழி வகை செய்யும் ஒப்பந்தத்தின் மூலம் மும்பை, விசாகப்பட்டினம் துறைமுகங்களை ரஷ்யா கடற்படை பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்திய விமானப்படை தளங்களையும் ரஷ்ய விமானப்படை பயன்படுத்த முடியும்.

இதே போன்று இந்திய விமானப்படையும், கடற்படையும் ரஷ்யா தளங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். கச்சா எண்ணெய் வளம் நிறைந்ததும், எந்த நாட்டிற்கும் சொந்தமில்லாத நிலபரப்பும் ஆன ஆர்டிக் பனிப்பரப்பில் ஆய்வு நடத்த இந்திய மேற்கொண்டுள்ள திட்டப்பணிகளுக்கு, ஆர்டிக்கை ஒட்டிய ரஷ்ய கடற்படை தளத்தை இந்தியா பயன்படுத்திக் கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகை செய்து தரும் என்பது முக்கிய அம்சமாகும். மேலும் சென்னை - Vladivostok இடையிலான கடல் வழி பயணத்தை தொடங்கவும் இந்த ஒப்பந்தம் மூலம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்யும் அதே நாளில் ரஷ்யாவின் Vladivostok துறைமுகத்தில் இந்திய போர்க்கப்பலை நிறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதே போன்ற ஒப்பந்தத்தை அமெரிக்கா மற்றும் பிரான்சுடன் இந்தியா ஏற்கனவே மேற்கொண்டுள்ளது. இதே நேரத்தில் உலகில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுடன் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ள ஒரே நாடு இந்தியாதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments