நிலவில் மனிதன் - பெரும் பாய்ச்சலின் 50ஆம் ஆண்டு

0 679

2019 ஜூலை 20 மனிதன் நிலவில் தனது காலடியைப் பதித்து 50 ஆண்டுகளைத் தொட்டுவிட்டான். மனிதகுலத்தின் மிகப்பெரிய பாய்ச்சல் என வர்ணிக்கப்படும் அந்த நிகழ்வு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி...

அணு ஆயுதங்களில் மட்டுமல்ல, விண்வெளி விஞ்ஞானத்திலும் யார் கில்லி என்கிற போட்டி அமெரிக்காவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே 1960 களின் தொடக்கத்தில் தீவிரம் பெற்றிருந்தது.

இரு நாடுகளும் நீயா நானா என விண்கலங்களை ஏவிக் கொண்டிருந்த நிலையில், 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் நாள் முதன்முதன்முதலாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பிய பெருமையை தட்டிச் சென்றது ரஷ்யா.

வஸ்தோக் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்ற யூரி ககாரின் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் 108 நிமிடங்கள் பயணித்துவிட்டு பத்திரமாக பூமிக்குத் திரும்பினார்.

ரஷ்யா இந்த சாதனையை நிகழ்த்திய 43 நாட்களில் அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் எப் . கென்னடி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இன்னும் பத்து ஆண்டுகளில் நிலவிற்கு மனிதனை அனுப்பி பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவோம் என்ற அந்த அறிவிப்பு.

அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஜான் எப். கென்னடி துப்பாக்கியால் சுடப்பட்டு மரணமடைந்த போதும், அவரது சபதத்திற்காக அமெரிக்க விஞ்ஞானிகள் உழைத்த உழைப்பு, 1969 ஆம் ஆண்டு அப்பல்லோ 11 எனும் நிலவுப் பயணத் திட்டமாய் உருப்பெற்றது.

புவியிலிருந்து 3,84,000 மைல்கள் தொலைவில் உள்ள நிலாவிற்கு 1969 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் நாள் ஏவப்பட்ட அந்த விண்கலத்தில், கடும் பயிற்சி பெற்ற நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரின், மைக்கேல் காலின்ஸ் ஆகிய மூன்று வீரர்கள் இருந்தனர்.

மூன்று வீரர்களையும் விண்வெளியில் செலுத்திய ஏவுகலத்தின் பெயர் அப்போலோ சாட்டர்ன் 5. ஏவுகலத்தின் உச்சியில் அப்போலோ விண்கலம் இருந்தது. அது 4 பகுதிகளால் ஆனது. முதல் பகுதியின் பெயர் லூனார் மாட்யூல், அதுதான் நிலவில் போய் இறங்கும்.

இரண்டாவது பகுதி சர்வீஸ் மாட்யூல், அது வழித்தடத்தை சரியாக்கவும் சுற்றுப்பாதையில் நுழையவும் விடுபடவும் தேவைப்படும் அமைப்புகளைக் கொண்டது.

மூன்றாவது பகுதி மூன்று வீரர்களையும் கொண்டது. மேலும் ஒரு பகுதி, பென்சிலைப் போல் உள்ள லான்ச் எஸ்கேப் சிஸ்டம். அதாவது, ஏவப்படும்போது ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், வீரர்களைக் காப்பாற்றும் விதத்தில் தனியே கழற்றிவிடுவதற்கானது.

சாட்டர்ன் 5-ன் முதல் பகுதி அப்போலோவை மணிக்கு 6,000 மைல்கள் வேகத்தில் உந்தித்தள்ளியபடி புவியிலிருந்து 42 மைல்கள் உயரத்துக்குச் சென்றது. அத்துடன் முதல் பகுதி கழன்றுகொண்டது.

இதையடுத்து சாட்டர்ன் 5-ன் இரண்டாவது பகுதி உசுப்பிவிடப்பட்டு விண்கலத்தை ஏந்திச்சென்றது. ஏவுதலில் எந்தப் பிரச்சனையும் இல்லாததால் லான்ச் எஸ்கேப் சிஸ்டம் கழன்றுகொண்டது. ஏவுகலத்தின் இரண்டாவது பகுதி விண்கலத்தை மேலும் உயரத்தில் செலுத்திவிட்டு அதுவும் கழன்றுகொண்டது.

அப்போது மூன்றாவது பகுதியானது அப்பல்லோ விண்கலத்தைப் புவியின் மேற்பரப்பிலிருந்து 103 மைல் உயரத்திலுள்ள சுற்றுவட்டப்பாதையில் செலுத்தி, பின்னர் நிலவை நோக்கிச் செலுத்தியது. அத்துடன் சாட்டர்ன்-5 ராக்கெட்டின் வேலை முடிந்துவிட்டதால் அதுவும் கழன்றுகொண்டது. இதற்குப் பிறகு மூன்று நாட்கள் பயணம்.

இறுதியில் நிலவின் ஈர்ப்பு விசையால் அதன் சுற்றுவட்டப்பாதையில் உள்வாங்கப்பட்டது விண்கலம். அங்கே ஆம்ஸ்ட்ராங்கும் ஆல்டரினும் கழுகு என்று பெயரிடப்பட்ட லூனார் மாட்யூலுக்கு மாறிக்கொள்கின்றனர்.

கழுகு மெதுவாக நிலவின் மேற்பரப்பை நோக்கி இறங்கத் தொடங்குகிறது. கொலம்பியா என்று பெயரிடப்பட்ட கமாண்ட் மாட்யூலில் இருந்தபடி காலின்ஸ் நிலவைச் சுற்றிவருகிறார். கழுகு தன் விசையைக் குறைத்துக்கொண்டு நிலவின் மேற்பரப்பில் இறுதியாக இறங்கியது.

முதல் மனிதராக நீல் ஆம்ஸ்ட்ராங் கீழே இறங்கி நிலவில் கால்வைத்தார். “இது ஒரு மனிதன் எடுத்துவைத்த சிறிய காலடி. ஆனால், மனித குலத்தின் பெரும் பாய்ச்சல்” என்றார் அவர். அவரை அடுத்து 19 நிமிடங்கள் கழித்து ஆல்ட்ரின் நிலவில் கால்வைத்தார்.

இருபத்தொன்றரை மணி நேரம் நிலவில் இருந்துவிட்டு, இறங்குவதற்கான கியரை விட்டுவிட்டுக் கழுகு புறப்பட்டது. நிலவைச் சுற்றிவந்த கொலம்பியா விண்கலத்துடன் அது மறுபடியும் சேர்ந்துகொண்டது.

அதன் பிறகு, புவி நோக்கி இரண்டரை நாள் பயணம். புவியின் வளிமண்டலத்தை நெருங்கும்போது அந்தக் கலத்தின் செலுத்துக் கருவிகள் உள்ளிட்ட தேவையற்ற பகுதிகள் கழற்றிவிடப்பட்டன.

விண்வெளியிலிருந்து புவியின் வளிமண்டலத்துக்குள் நுழையும் எதுவும் தீப்பற்றிக்கொள்ளும் என்பதால், எஞ்சிய கமாண்ட் மாட்யூலுக்குத் தீப்பாதுகாப்புக் கவசம் இடப்பட்டிருந்தது. எரிந்துகொண்டே மணிக்கு 25 ஆயிரம் மைல் வேகத்தில் புவியை நோக்கித் திரும்பிவந்த கமாண்ட் மாட்யூல் பசிபிக் பெருங்கடலில் விழுந்தது.

உடனே, பாராசூட்கள் மூலம் வீரர்கள் மீட்கப்பட்டனர். ஏவுகலம், எரிபொருள், விண்கலம், வீரர்கள், ஏனைய சுமைகள் என்று 30 லட்சம் கிலோ எடையுடன் புறப்பட்டுச் சென்ற அப்போலோ-11 வெறும் 5,557 கிலோ கொண்ட கமாண்ட் மாட்யூலாகத் திரும்பிவந்தது.

நிலவில் மனிதர்கள் கால்வைத்த இந்த நிகழ்வை உலகெங்கும் 53 கோடிப் பேர் தொலைக்காட்சியில் கண்டுகளித்தனர்.

நிலவில் மனிதன் இறங்கிய சாதனையைப் போலவே, அது குறித்த சர்ச்சையும் 50 ஆண்டுகளாக நீடிக்கிறது.

இந்த நிலையில், இதுவரை யாரும் நெருங்காத நிலவின்தென்துருவத்தில் ஆய்வூர்தியை இறக்கும் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராக உள்ளது இந்தியாவின் சந்திரயான்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments