சிக்கன் பக்கோடாவுக்காக சிறுமி அடித்து கொலை..! வட மாநில இளைஞர் கைது

0 6498

திருவள்ளூர் அருகே 4 வயது சிறுமியை அழைத்துக் கொண்டு டாஸ்மாக் கடைக்கு மது அருந்தச்சென்ற வட மாநில இளைஞர் ஒருவர், சிக்கன் பக்கோடா கேட்டு அடம் பிடித்த சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அடுத்த மதுரா கொத்தம்பாக்கம் என்ற பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹாலோ பிளாக் கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இதில் வட மாநிலத்தைச் சேர்ந்த 25 குடும்பத்தினர் வேலை பார்த்து வருகின்றனர்.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அமீர் என்பவர் தமது மனைவி மற்றும் 4 வயது மகளுடன் அந்த தொழிற்சாலையில் தங்கி வேலை பார்த்து வந்தார். கடந்த ஞாயிறன்று அமீரின் உறவினரான நிலக்கர் என்ற இளைஞருடன் வெளியில் சென்ற 4 வயது சிறுமியை காணவில்லை.

சிறுமியின் பெற்றோர் நிலக்கரிடம் விசாரித்த போது, மது போதையில் இருந்த அந்த இளைஞர், தெளிவாக பதில் அளிக்கவில்லை. மேலும் பல இடங்களில் தேடியும் சிறுமியும் கிடைக்கவில்லை. திங்கட்கிழமை காலையில் ஹாலோ பிளாக் தயார் செய்யும் தொழிற்சாலையின் பின்புறம் உள்ள முட்புதர் ஒன்றில் காணாமல் போன சிறுமி முகத்தில் காயங்களுடன் சடலமாக கிடந்தாள்.

அதனை கண்ட பெற்றோர் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு புகார் அளித்தனர். முகத்தில் காயங்களுடன் கொல்லப்பட்டு கிடந்த சிறுமியின் உடலை மீட்ட காவல்துறையினர், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

முதலில் சிறுமி தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்று அமீரின் உறவினர் நிலக்கர் சொன்னதை உண்மை என நம்பி காவல்துறையினர் வழக்கை முடிக்க நினைத்த நேரத்தில், இது ஒரு கொலை என்பது சிறுமியின் பிணகூறாய்வு அறிக்கை மூலம் தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை கடைக்கு கூட்டி சென்ற நிலக்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் மூன்று பேரிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை நிலக்கர் டாஸ்மாக் மதுக்கடைக்கு அழைத்து சென்ற தகவல் தெரியவந்தது.

அதனை தொடர்ந்து நிலக்கரிடம் நடத்திய விசாரணையில் சிறுமி மரணத்துக்கான மர்மம் விலகியது. சம்பவத்தன்று டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு திரும்பி வரும் போது சிக்கன் பக்கோடா வாங்கி வந்ததாகவும், சிறிய பாலம் ஒன்றின் மேல் உட்கார்ந்து அதனை சாப்பிட்டுள்ளான். அப்போது பக்கோடாவை கேட்டு அடம் பிடித்த சிறுமி, தனது கையை கடித்து வைத்தால் ஆத்திரம் அடைந்து அடித்து கொலை செய்ததையும், கொலையை மறைப்பதற்காக கீழே விழுந்து இறந்ததாக நாடகமாடியதையும் நிலக்கர் ஒப்புக் கொண்டான். இதையடுத்து நிலக்கரை கைது செய்த காவல்துறையினர் அவனை புழல் சிறையில் அடைத்தனர்.

சிக்கன் பக்கோடாவுக்காக 4 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில் உறவினராக இருந்தாலும் தங்கள் வீட்டு குழந்தைகளை குடிகாரர்களோடு அனுப்பினால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சான்று..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments