கிடைக்காத குடிநீர் - ஊரை காலி செய்த மக்கள்

0 1238

தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் அருகே குடிநீர் இல்லாமல் ஒட்டுமொத்த மக்களும் காலி செய்த கிராமத்தில், தன் மக்கள் என்றாவது ஊர் திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஒரே ஒரு முதியவர் மட்டும் தன்னந்தனியாக வசித்து வருகிறார். 

கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் என்ற அந்த கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வந்துள்ளனர். 8 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட கடுமையான தண்ணீர் பஞ்சம் காரணமாக ஒவ்வொருவராக ஊரை காலி செய்ததாகக் கூறப்படுகிறது.

குடிநீர் பஞ்சத்தைப் போக்க பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி ஒட்டுமொத்த கிராமமே வேறு வழியின்றி ஊரை காலி செய்து பக்கத்து கிராமங்களில் குடியேறியுள்ளது.

ஆனால், தாம் பிறந்து வளர்ந்த ஊரையும் 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துபோன தன் மனைவி வாழ்ந்த வீட்டையும் விட்டு வெளியேற மாட்டேன் என அடம் பிடித்து கந்தசாமி என்ற 72 வயது முதியவர் மட்டும் மீனாட்சிபுரத்தில் தன்னந்தனியாக வசித்து வருகிறார்.

கடந்த 4 ஆண்டுகளாக இங்கு தனியாக வசிக்கும் கந்தசாமியுடன் இரண்டு வளர்ப்பு நாய்கள் மட்டும் உள்ளன. வெளியூர்களில் வசிக்கும் கந்தசாமியின் இரு பிள்ளைகள் அவ்வப்போது வந்து அவருக்குத் தேவையான பணம், பொருள் உள்ளிட்ட உதவிகளை செய்து செல்கின்றனர்.

ஒட்டுமொத்த ஊர் மக்களும் காலி செய்த பிறகே அதன் தீவிரத்தை உணர்ந்த அதிகாரிகள், கடந்த 6 மாதங்களுக்கு முன் அங்கு ஒரு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி அமைத்து குடிநீர் வசதியை செய்துகொடுத்துள்ளனர். யாருமே இல்லாத ஊரில் இப்போது 24 மணி நேரமும் தண்ணீர் வருகிறது.

அதிகாரிகளின் காலம் கடந்த நடவடிக்கையால் எந்தப் பலனும் இல்லாமல் போய்விட்டதாகக் கூறும் முதியவர் கந்தசாமி, என்றாவது ஒருநாள் தம் மக்கள் ஊர் திரும்புவார்கள் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

மீனாட்சிபுரம் முழுவதுமே சிதிலமடைந்த வீடுகள் காணப்பட்டாலும் அங்குள்ள அம்மன் கோவிலுக்கு மட்டும் அவ்வப்போது கிராம மக்கள் வந்து வழிபட்டுச் செல்வதால் அது பளிச்சென்று காணப்படுகிறது.

அந்தக் கோவிலை ஏக்கத்தோடு பார்த்தவாறு, என்றாவது ஒருநாள் ஊரை காலி செய்துவிட்டுப் போன தம் மக்கள் திரும்பி வருவார்கள் என எதிர்பார்த்துக் காத்துக்கொண்டு இருக்கிறார் முதியவர் கந்தசாமி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments