சனிக்கிழமை பொங்கல் வைத்த கொள்ளையர்கள்..!

0 1318

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணியில் சனிக்கிழமை இரவுகளில் மட்டும் கடைகளின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டும் கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி, தினைக்குளம், தாமரைகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக வாரந்தோறும் சனிக்கிழமை இரவு மட்டும் செல்போன்,கேமரா லேப்டாப் உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் அதிகளவில் கடைகள் மற்றும் கிராமப்புற வீடுகளில் திருட்டுப் போவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனையடுத்து இந்த வினோதத் திருடர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை இரவு திருப்புல்லாணியை அடுத்த குத்துக்கல்வலசை பகுதியில் உள்ள அரிசி மண்டியில் நள்ளிரவில் ஒருவர் பூட்டை உடைத்து லேப்டாப், 10 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை திருடிய காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த சிசிடிவி வீடியோவை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது சிசிடிவியில் பதிவான நபர் தான், கடந்த ஜூன் மாதம் 29ந் தேதி சனிக்கிழமை நள்ளிரவில் தினைக்குளம் பகுதியில் உள்ள செல்போன் கடையிலும் திருடி இருப்பது தெரிய வந்தது.

இதனை அடுத்து அந்த திருடனின் புகைப்படத்தைக் கொண்டு போலீசார் அவனை பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்நிலையில், நேற்று காலை காவல்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில் அவர்களை பிடிப்பதற்காக வலை விரிக்கப்பட்டது.

அப்போது காவல்துறையினரைக் கண்டதும் திருடர்கள் மூவரும் தப்பிச் செல்ல முயன்ற போது அவர்களை துரத்தி பிடித்த போலீசார், திருப்புல்லாணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் சின்னசேலத்தை சேர்ந்த வெங்கடேசன்,அழகன்குளத்தைச் சேர்ந்த மகேந்திரன் மற்றும் முசிறியைச் சேர்ந்த லோகநாதன் ஆகிய மூவரும் திருச்சி சிறையில் இருந்த போது நட்பு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.

பின்னர் கீழக்கரையில் வசித்து வரும் மகேந்திரன் என்பவரின் உதவியுடன் மூவரும் திருப்புல்லாணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை இரவு மட்டும் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இவர்கள் செல்போன்,லேப்டாப்,கேமரா ஆகியவைகளை மட்டும் குறி வைத்து திருடி இருப்பதும் தெரியவந்தது.

தொடர்ந்து அவர்கள் மூவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments