மசாஜ் பார்லரில் கத்தியை காட்டிய கைகளுக்கு மாவுகட்டு..!

0 4434

சென்னையில் அனுமதியின்றி செயல்படும் மசாஜ் பார்லர்களுக்குள் புகுந்து, மசாஜ் செய்யும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி, பணம் மற்றும் நகை பறிக்கும் கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மசாஜ் பார்லரை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டுத் தப்பி ஓடிய 3 கொள்ளையர்களின் கைகளில் மாவுகட்டுப் போடப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு... 

சென்னையில் நீதிமன்ற அனுமதியுடன் ஒரு சில மசாஜ் பார்லர்கள் செயல்பட்டு வந்தாலும், பெரும்பாலான மசாஜ் பார்லர்களில் சட்டவிரோத செயல்கள் நடப்பதால் முறையான அனுமதியின்றி லோக்கல் காவல்துறையினரின் ஆசியுடன் செயல்பட்டு வருவதாக கூறப்படுகின்றது.

இந்த மசாஜ் பார்லர்களுக்கு செல்லும் ஆண் வாடிக்கையாளர்களுக்கு, பெண்களை மசாஜ் செய்ய வைத்து பணம் கறந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்த பார்லர்களை குறிவைத்து, கடந்த 4 வருடமாக ரவுடி மங்களேரி குமரன் தலைமையிலான கும்பல் கைவரிசை காட்டி வருவதாக கூறப்பட்டது.

அந்தவகையில் நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணி காமராஜ் தெருவில் ரகசியமாக செயல்பட்டு வந்த நியூ லுக் ஸ்பா அண்ட் சலூன் என்ற மசாஜ் பார்லரில் இந்த கும்பல் கைவரிசை காட்டியுள்ளது.

கடந்த 13 ந்தேதி மாலையில் மங்களேரி குமரன் தலைமையிலான 6 பேர் கும்பல் பட்டாக் கத்தியுடன் நுழைந்து, அங்கிருந்த பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டுள்ளனர். அங்கிருந்த 47 ஆயிரம் ரூபாய் ரொக்கம், பெண்களிடம் இருந்து மோதிரம் மற்றும் தங்கச் சங்கிலியை பறித்துள்ளனர். ஒருவர் சென்று விட 5 பேர் உள்ளே நின்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த மசாஜ் பார்லர் உரிமையாளர் ஜீவா, கடையை வெளிப்பக்கமாக பூட்டிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். போலீசார் வந்து கடையை திறந்து கத்தியுடன் நின்றவர்களை பிடிப்பதற்குள் அங்கிருந்த மங்களேரி குமரன் தலைமையிலான கும்பல் தப்பி ஓடியுள்ளது.

இதில் விக்னேஷ், சூர்யா, தர்மா ஆகியோர் போலீசில் சிக்கிய நிலையில் குமரன், பிரபாகரன் சதீஷ் ஆகியோர் தலைமறைவாகினர். இந்த நிலையில் கை முறிந்த நிலையில் மங்களேரி குமரன், பிரபாகரன், சதீஷ் ஆகிய 3 பேரும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். போலீசுக்கு பயந்து உயரமான கட்டிடத்தில் இருந்து குதிக்கும் போது கை உடைந்ததாக கூறி அவர்கள் 3 பேருக்கும் மாவுக்கட்டு போடப்பட்டது.

காவல்துறையினரின் விசாரணையில், இந்த கும்பல் கடந்த 4 வருடங்களில் வேளச்சேரி, துரைப்பாக்கம், திருவான்மியூர், நீலாங்கரை, வெட்டுவாங்கேணி உள்ளிட்ட பகுதிகளில் 22 மசாஜ் பார்லர்களில் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

முதலில் தங்களது கூட்டாளி ஒருவரை மசாஜ் செய்ய அனுப்பி வைத்து, அங்குள்ள பெண்களுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டு செல்போனில் படம்பிடிப்பது இந்த கும்பலின் வழக்கம். பின்னர், கத்தியுடன் உள்ளே நுழையும் மங்களேரி குமரனின் கும்பல், அங்கிருக்கும் ஊழியர்களை பயமுறுத்த கைகளில் வெட்டுவார்கள்.

3 பேர் அங்கிருக்கும் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டிருக்க, 3 பேர் அங்கு பணியில் உள்ள பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுவிட்டு தலைமறைவாகி விடுவது வழக்கம். போலீசுக்கு புகார் அளிக்க சென்றால், அனுமதி இல்லாமல் மசாஜ் பார்லர் நடத்தப்படுவது உயர் அதிகாரிகளுக்கு தெரிந்தால் சிக்கலாகி விடும் என்று, இந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்காமல் லோக்கல் போலீசார் மறைத்து வந்துள்ளனர்.

கடந்த சில தினங்களில் மட்டும் அடுத்தடுத்து 3 சம்பவங்கள் அரங்கேறியதால் இந்த கும்பலின் கைவரிசை அடையாறு துணை ஆணையர் பகலவன் கவனத்துக்கு தெரிய வந்துள்ளது. அவரது உத்தரவின் பேரில் தனிப்படை காவல்துறையினர் இந்த கொள்ளைக் கும்பலை அதிரடியாக கைது செய்துள்ளனர் கைது செய்யப்பட்ட 6 பேரும் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

இந்த சம்பவங்களை தொடர்ந்து சென்னை நகரில் செயல்படும் ரகசிய மசாஜ் பார்லர்கள் குறித்து விரிவான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments