குறைந்த மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கும், தங்குதடையின்றி, பேருந்துகள் இயக்கம்

0 346

குறைந்த மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கும், தங்குதடையின்றி, பேருந்துகள் இயக்கப்படுவதாக, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.

சட்டப்பேரவையில், போக்குவரத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், திருவள்ளூர் திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் பேசினார். கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு முறை கட்டணம் விலையேற்றியும், போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில் தான் இயங்குவதாக அவர் தெரிவித்தார்.. நிர்வாக திறன் இருந்திருந்தால் நஷ்டத்தில் இருந்து மீட்டிருக்கலாம் என வி.ஜி.ராஜேந்திரன் கூறினார். இதற்கு பதிலளித்த, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், நிர்வாக திறனோடு இருந்திருந்தால், திமுக, ஆட்சியை விட்டுச் செல்லும் போது லாபத்தோடு, போக்குவரத்துறையை விட்டு சென்றிருக்க வேண்டும் என்றார்.

பேருந்து கட்டண அதிகரிப்புக்கு, டீசல் கட்டணம், ஊழியர்கள் ஊதிய உயர்வு போன்ற பல காரணங்கள் உள்ளதாகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.  அண்மையில், கிராமசபை கூட்டங்களில், பெரும்பாலானவற்றில், பேருந்து சேவை வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடம் இருந்து எழுந்ததாகவும், பல வழித்தடங்களில், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், திமுக எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் கூறினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மக்கள் பயன்பாடே இல்லாத வழித்தடங்களில் மட்டுமே ஓரிரு பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது என்றார். ஆயிரம் குடியிருப்புகள் இருந்தால் பேருந்துகள் இயக்க வேண்டும் என்று விதி இருந்தாலும், 500 மக்கள் தொகை உள்ள பகுதிகளுக்கும், எவ்வித லாப நோக்கமும் இன்றி பேருந்துகள் இயக்கப்படுவதாக, அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments