வாவ் காயின் எனக்கூறி மோசடி..! வெளிநாடு தப்ப முயன்ற பெண் கைது

0 2098

வாவ் காயின் எனப்படும் இ-காயின் வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்துவிட்டு,  தலைறைவாக இருந்த பெண் மலேசிய நாட்டிற்கு தப்ப முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார். 

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர் இந்திராணி. இவருக்கு முகநூல் மூலமாக பழக்கமான மாதேஷ் என்பவர், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சியான வாவ் காயின் வர்த்தகத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். அண்ணாநகரில் வசித்து வரும் பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைண்ட் ஜோசப் ஆகியோர், ஆன்லைனில் வாவ் காயினில் முதலீடு செய்ய உதவுவார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

10 ஆண்டுகளில் முதலீட்டுத் தொகையின் மதிப்பு ஆயிரம் மடங்காக உயரும் என ஆசையைத் தூண்டியதாகத் தெரிகிறது. இதையடுத்து, தனது வங்கிக்கணக்கிலிருந்து ஆன்லைனில் 18 லட்ச ரூபாய் பணத்தை மொத்தமாக சீனிவாசலு உள்ளிட்டோர் நடத்தி வரும் நிறுவன வங்கிக் கணக்கிற்கு இந்திராணி மாற்றியுள்ளார்.

6 மாதத்தில் முதலீடு செய்த 18 லட்ச ரூபாய் திரும்ப கிடைக்கும் என கூறிய நிலையில் பல மாதங்கள் கடந்த பின்னரும் அந்தப் பணம் கிடைக்கவில்லை. இதன் பின்னர் விசாரித்த போதுதான் இந்திராணியிடமிருந்து பெற்ற பணத்தை எந்த கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்யாமல் அவர்கள் ஏமாற்றியது தெரியவந்தது. பணத்தை திரும்ப கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுபற்றி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்த போது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திராணி தொடர்ந்த மனுவில், வழக்குப்பதிவு செய்ய அண்ணாநகர் போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து மோசடி தொடர்பான ஐ.பி.சி.-420 பிரிவின் கீழ் பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலு, ஆர்த்தி, கிளைண்ட் ஜோசப் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த மூவரையும் அண்ணாநகர் காவல்நிலைய போலீசார் தேடி வந்தனர். மேலும், விமான நிலையங்களில் தப்பி செல்லாத வண்ணம் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியா தப்பி செல்ல முயன்ற பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலுவை அடையாளம் கண்ட குடியுரிமை அதிகாரிகள் அண்ணாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, அண்ணாநகர் போலீசார், விமான நிலையத்திற்குச் சென்று, மோசடி செய்துவிட்டு, வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற பத்மஜ் பொம்முசெட்டி சீனிவாசலுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள, இரண்டு பேரையும், அண்ணாநகர் காவல்நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

கிரிப்டோ கரன்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டிருப்பதால், அவற்றில், முதலீடு செய்தால், அதிக லாபம் ஈட்டலாம் என ஆசைவர்த்தை கூறினால், அதனை நம்பி, பணத்தை இழக்க வேண்டாம் என போலீசார் எச்சரிக்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments