தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாக்கள் 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதமே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன

0 767

நீட் தேர்வில் விலக்களித்து தமிழக அரசு கொண்டு வந்த இரண்டு மசோதாக்களை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியதாக மத்திய உள்துறை துணை செயலாளர் ராஜிவ் எஸ்.வைத்யா சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தமிழக சட்டப்பேரவையில், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கை சட்டம், தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை சட்டம் என இரு சட்ட மசோதாக்கள் 2017 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

2017- 18 ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு முன் இந்த இரு சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு துறைகளுக்கு உத்தரவிடக்கோரி, கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, தமிழ்நாடு மாணவர்கள் பெற்றோர் நலச் சங்கம் உள்பட 4 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, இரு சட்ட மசோதாக்களும் குடியரசு தலைவரால் நிராகரிக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக சார்பு செயலாளர் பதிலளித்ததாக, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்த சட்ட மசோதாக்கள் பெறப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட தேதிகள் உள்ளிட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்த மத்திய உள்துறை துணை செயலாளர் ராஜிவ் எஸ்.வைத்யா, நீட் தேர்வில் இருந்து விலக்களித்து தமிழக அரசு கொண்டு வந்த மசோதாக்களை 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதியே தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு நிறைவேற்றிய இரு மசோதாக்கள் 2017 பிப்ரவரி 20 ஆம் தேதி உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்க பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மசோதாக்கள் குறித்து கருத்து தெரிவிக்கும் படி அன்றைய தினமே சட்டம் மற்றும் நீதி, சுகாதாரம், மனித வள மேம்பாட்டு துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த துறைகளின் கருத்துக்களை பெற்ற பின் 2017 செப்டம்பர் 11 ஆம் தேதி குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது என்றும், செப்டம்பர் 18 ஆம் தேதி இரண்டு மசோதாக்களை நிறுத்தி வைத்து குடியரசு தலைவர் உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார். பின்னர், செப்டம்பர் 22 ஆம் தேதி இரண்டு மசோதாக்கள் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டது என அந்த பதில் மனுவில் தெரிவிக்கபட்டுள்ளது. தொடர்ந்து புதன்கிழமையும் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments