8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்

0 894

தமிழகத்தின் எட்டு மாவட்டங்களில் அடுத்து மூன்று தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதே நேரத்தில் தென் மேற்கு பருவமழை இயல்பை விட 31 சதவிகிதம் குறைவாகவே பெய்துள்ளது. 

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழகத்தின் வடக்கு மாவட்டம் முதல் தெற்கு மாவட்டங்கள் வரையிலும் வளி மண்டலத்தின் கீழ் அடுக்கில் உள் மாவட்டங்கள் வழியாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது என்றார்.

இதன் காரணமாகவும், வெப்பச்சலனம் காரணமாகவும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலுமான மழை பெய்யக்கூடும் என்ற அவர், இதே நேரத்தில் எட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றார். 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்ற பாலசந்திரன், தென்மேற்கு பருவமழை நடப்பு ஆண்டில் இதுவரை சராசரியை விட 31 சதவிகிதம் குறைவாகவே பெய்துள்ளது என்றார். 

மீனவர்களுக்கான சிறப்பு எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் பாலசந்திரன் தெரிவித்தார். இதனிடையே கேரளாவில் வருகிற 18- ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், மலப்புரம், இடுக்கி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் அந்த மாவட்டங்களுக்கு 18 மற்றும் 19-ந்தேதிகளில் ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

அதே போல திருவனந்தபுரம், பத்தனம்திட்டா, கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
மழை 18-ந்தேதி முதல் ஒரு வாரத்திற்கு நீடிக்கும் என்றும், மழையின் போது 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையும் என்ற எச்சரிக்கையை தொடர்ந்து கேரளாவில் மழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT