தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவங்கினால் கிரிமினல் வழக்கு

0 792

தமிழக அரசின் அனுமதியின்றி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை துவங்க முற்பட்டால் கிரிமினல் வழக்கு தொடுக்கப்படும் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் மேலும் 23 இடங்களில் துவங்க அனுமதி வழங்கப்பட உள்ளதாகவும் கூறியுள்ளதை சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அரசு அனுமதி அளித்தாலும், மாநில அரசின் அனுமதி இல்லாமல் திட்டத்தை துவங்க முடியாது என்றார். மேலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு இந்த விவகாரத்தில் வல்லுனர் குழு அமைத்து சாதக பாதகங்களை ஆராய்ந்து உரிய முடிவு எடுக்கும் என்றும் சிவி சண்முகம் தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பதை உயர்நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தியிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். மேலும் மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழ்நாட்டில் துவங்க முற்பட்டால் அதனை தடுத்து நிறுத்த சட்டத்தில் இடம் இருப்பதாகவும், மீறி செய்தால் கிரிமினல் வழக்கு தொடுக்க உரிமை உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments