மும்பையில் 4 அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து

0 679

மும்பையில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

மும்பையின் தெற்கு பகுதியான டாங்கிரியின் தண்டேல் தெருவில், 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. பலத்த சத்தத்துடன் கட்டிடம் இடிந்து விழுந்ததை அறிந்து அங்கு திரண்ட அக்கம்பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினர், இடிபாடுகளை அகற்றி மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும் கட்டிடம் இருந்த இடம் குறுகலான தெரு பகுதி என்பதால், மக்கள் சங்கிலி தொடரில் நின்று இடிபாடுகளை அகற்றி, காயமடைந்தவர்களை மீட்டு வருகின்றனர். இந்த கோர விபத்தில், 2 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு சுமார் 8 குடும்பங்கள் வசித்து வந்ததால் 40க்கு மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், விபத்துக்குள்ளான கட்டடம் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது எனவும், மும்பையில் பெய்த தொடர் மழை காரணமாக அஸ்திவாரம் உறுதித்தன்மையை இழந்து கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்த மகராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நவீஸ், விபத்துக்குள்ளான கட்டடம் நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்றும், அந்த கட்டிடம் அமைந்த பகுதியை மறுகட்டமைக்க அனுமதி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்த விசாரணைக்குப் பிறகுதான், மறுகட்டமைப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டனவா என்பது தெரியவரும் என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT