காரைக்காலம்மையார் ஆலய மாங்கனி திருவிழா கோலாகலம்...

0 572

புதுவை காரைக்காலில், பிரசித்தி பெற்ற, காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் மாங்கனி திருவிழா வழக்கமான உற்சாகத்துடன் நடைபெற்றது.

63 நாயன்மார்களில், பெண் நாயன்மாரான, காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் மாங்கனி திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய நிகழ்வான, அடியார் கோலத்தில்,  பரமசிவன், பத்மாசனத்தில் அமர்ந்து, பவழக்கால் விமானத்தில் வீதியுலா வர, பக்தர்கள் அவர் மீது வாரி இறைக்கும் மாங்கனிகளை பிடித்துச் சாப்பிட்டு மகிழும் நிகழ்ச்சி நடைபெற்றது.

image

சிவபக்தையான காரைக்கால் அம்மையாரின் பக்தியை சோதித்து, நாயன்மாராக மாற்ற, பரமசிவன் நடத்திய திருவிளையாடலே மாங்கனி திருவிழா என புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

பரமசிவன், பிக்க்ஷாடண மூர்த்தியாக, வந்த போது, காரைக்கால் அம்மையார் தனது கணவர் சாப்பிட வைத்திருந்த இரு மாங்கனிகளில் ஒன்றை கொடுத்து விடுகிறார்.

பின்னர் கணவருக்கு மீதம் உள்ள ஒரு பழத்தை மட்டும் சாப்பிட கொடுக்க, அவர் மேலும் ஒரு பழத்தையும் கேட்கிறார். அப்போது சிவனிடம் அம்மையார் வேண்ட, இன்னொரு பழம் கையில் கிடைக்கிறது. ஆனால் ருசியில் வேறுபாடு இருப்பதை அறிந்த கணவர், அம்மையார் மீது சந்தேகப்பட்டதால், அவர் சிவனிடம் வேண்டி மேலும் ஒரு பழத்தையும்  பெற்றுக்கொடுக்கிறார்.

இதைக்கண்டு திகைத்த கணவர், நீ இறைசக்தி கொண்டவள், உன்னிடம் குடும்பம் நடத்த ஆகாது, என்று பாண்டி நாடு சென்று, இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து, குழந்தைகளுடன் வசிக்கிறார். அப்போது அங்கு தேடி வந்த அம்மையாரைப்பார்த்ததும், காலில் விழுந்து கணவர் மன்னிப்பு கோருகிறார்.

கணவரையே காலில் விழ வைத்துவிட்டோமே என வருந்திய அம்மையார், மானிட பிறவியே வேண்டாம் என்று பேயாக உருவம் எடுத்து சிவன் புகழ்பாடியவாறு, தலைகீழாக நடந்து, கைலாசம் அடைவதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. எனவே தான் மாங்கனியை மையமாக கொண்டு திருவிழாவா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. வீதி உலா வரும் சிவன் மீது இறைக்கப்படும் மாங்கனிகளை பிடித்து உண்டால் திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம் எனவும் கூறப்படுகிறது.

திருவிழாவை யொட்டி காரைக்காலில் கல்வி நிறுவனங்களுக்கும், அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில், புதுச்சேரி அமைச்சர் கமலக்கண்ணன், ஆட்சியர் விக்ராந்த் ராஜா, மற்றும் ஆயிரக்கணக்கான  பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments