சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை... கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் பறிமுதல்..

0 836

திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்ற சோதனையில், கணக்கில் வராத 6 லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது.

ஆடி மாதம் பிறக்க இருப்பதால், அதற்கு முன்பு ஏராளமான பத்திரப் பதிவுகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகளவில் லஞ்சப் பணம் பரிவர்த்தனை நடைபெறுவதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், திருச்சி உறையூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனையின்போது, பொதுமக்கள் பத்திரப் பதிவிற்காக கொண்டு வந்திருந்த ஒரு லட்சத்து 22 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர் அருகே வேப்பந்தட்டையில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் 6 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த சோதனையில், ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 700 ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டது. சார்பதிவாளர் பாலு உள்பட 9 பேரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள காந்திபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தப்பட்டது. சார் பதிவாளர் அம்சவேணியின் மேஜையில் இருந்த கணக்கில் கொண்டு வரப்படாத 80 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை பத்திரப் பதிவு அலுவலகத்தில் நடந்த சோதனையில் ஊழியர்கள் வைத்திருந்த கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் சிக்கியது. இதனால் சோதனை முடியும் வரை ஊழியர்கள் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நடந்த சோதனையில் 43 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. கணக்கில் வராத ரூபாய் நோட்டுகள் மற்றும் ஆவணங்களை கைப்பற்றிய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாமக்கல், சிதம்பரம், செஞ்சி, குன்னூர், அரியலூர், செக்கானூரணி, ஆகிய இடங்களிலும் சோதனை நடைபெற்று பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT