"3 கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி" விரக்தியில் கணவர் தற்கொலை

0 41552

புதுச்சேரியில் 3 பெண்களைக் காதலித்து மணந்த அழகுக் கலை நிபுணர் ஒருவர், மனைவிகளின் தொல்லை தாங்காமல் 30 வயதில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவரின் சடலத்தை கேட்டு 3 மனைவிகளும் போராடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராஜா என்ற 30 வயது அழகுக் கலை நிபுணர் தான் 3 பேரை காதலித்து திருமணம் செய்து விட்டு, வாழப் பிடிக்காமல் உயிரை மாய்த்துக் கொண்டவர்..!

தர்மபுரியில் அழகுக் கலை நிபுணராக இருந்த ராஜா, தனது மாமன் மகள் சத்தியா என்பவரை காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரு குழந்தைகள் இருக்கும் நிலையில், தேனிக்கு சென்ற ராஜா, அங்கு தனலெட்சுமி என்ற பெண்ணை காதல் வலையில் வீழ்த்தினார். அவரை 2 வதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தினார். அவருக்கும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், மதுரைக்கு மாற்றப்பட்டார் ராஜா.

அங்கு தாய் தந்தையரை இழந்து தனியாக வசித்து வந்த காவ்யா என்ற பெண்ணை காதலித்து 3-வதாக சேர்த்துக் கொண்டார். இவரது மன்மத லீலைகள் தெரிந்ததால் 2 மனைவிகளும் இவரிடம் சண்டையிட்டு வந்தனர். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன தகவல் 3 வது மனைவிக்கு தெரியாது.

இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள NB எனும் அழகு கலை நிறுவனத்தில் ராஜா பணியில் சேர்ந்துள்ளார். அங்கு தனியாக அறை எடுத்துத் தங்கியவர் தனது 3 வது மனைவியை குடித்தனம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். தன்னை ஊரறியத் திருமணம் செய்தால்தான் வருவேன் என்று அவர் நிபந்தனை விதித்துள்ளார்.

மற்ற 2 மனைவிகளும் தங்களுடன் சேர்ந்துவாழ வருமாறு வற்புறுத்தி வந்ததால், காதல் மன்னனாக வலம் வந்த ராஜாவின் வாழ்வில் இடி விழுந்தது. 3 மனைவிகள் இருந்தும், கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி போல வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

சம்பவத்தன்று 3 வது மனவியின் மனதை மாற்ற நீண்ட நேரம் செல்போனில் ஆசைவார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார் ராஜா. அவரது பேச்சுக்கு மயங்காத காவ்யாவோ பிடிவாதமாக இருந்துள்ளார். இந்த நிலையில் காவ்யாவின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆனதால் மனம் உடைந்து விரக்தி நிலைக்கு தள்ளப்பட்ட ராஜா, தங்கி இருந்த அறையின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ராஜாவின் சடலத்தை மீட்டு பிணகூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது அவரது செல்போனை கைப்பற்றி உறவினர்களின் தொலைபேசி எண்களைத் தேடியுள்ளனர். அதில் மனைவி 1, மனைவி 2, மனைவி 3 என்று குறிப்பிடப்பட்டிருந்ததால், அவரது மனைவியின் 3 செல்போன் எண்கள் என்று கருதி காவல்துறையினர் தகவல் தெரிவித்த நிலையில், காலையில் குழந்தை குட்டிகளுடன் 3 பேர், தாங்கள் தான் மனைவி என்று வந்து நின்றதால் காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.

3 பேரும் கணவர் ராஜாவின் சடலத்தை தங்களிடம் தான் தரவேண்டும் என்று கோரிக்கைவைத்து போராட்டத்தில் குதித்தனர். 3 வது மனைவி காவ்யா 19 வயது பெண் என்பதாலும் ஆதரவுக்கு வேறு யாரும் இல்லாததாலும் அவரது எதிர்காலம் கருதியும் போலீசார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

முதல் மனைவி உயிரோடு இருக்கும்போது, அவரது அனுமதியின்றி 2 வது மனைவியை திருமணம் செய்ய சட்டத்தில் இடமில்லை என்பதால், கணவரின் சடலத்தை பெற்றுச்செல்ல முதல் மனைவியே தகுதியானவர் என்ற அடிப்படையில் ராஜாவின் சடலம் மாமன் மகளான சத்தியாவிடம் ஒப்ப்டைக்கப்பட்டது. அவர் தனது கணவரின் சடலத்தை ஏற்றி செல்ல, சிறிது தூரம் அவரது சடலத்துடன் பயணிக்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுத்த தனலெட்சுமியும் அந்த வாகனத்தில் ஏறிச்சென்றார்.

3 வது மனைவியாக முறைப்படி திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்த காவ்யாவோ, போலீசார் எச்சரித்ததும் அங்கிருந்து சென்றுவிட்டார். ஒன்றை கட்டினாலே ஓராயிரம் பிரச்சனைகள் என்று வாழ்ந்து வருபவர்கள் மத்தியில், ஆசைக்கு ஒன்று, அசதிக்கு ஒன்று, வசதிக்கு ஒன்று என்று 3 பேருடன் முறையற்று வாழ்ந்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு சான்றாக மாறி இருக்கின்றது இந்த சம்பவம் ..!

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments