சாய்ராம் கல்லூரியில் மாணவர் சேர்க்கை முறைகேடு..! கண்ணீருடன் பெற்றோர் புகார்

0 2615

சென்னை பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில், விருப்பமில்லா மாணவரிடம் விவரங்களைப் பெற்று கட்டாயப்படுத்தி தங்களது கல்லூரியில் சேர்த்ததாக சாய்ராம் பொறியியல் கல்லூரி மீது பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

குசேலன் திரைப்படத்தில் விருப்பமில்லா நபர்களை கடத்தி சென்று வடிவேலு மொட்டை அடித்துக் கொண்டு பணம் வசூலிப்பார்..! அதே பாணியில் பொறியியல் மாணவர் சேர்க்கையில் சில தனியார் கல்லூரிகள் மாணவர்களிடம் நடந்து கொள்வதாக பெற்றோர் வேதனை தெரிவிக்கின்றனர்.

5 கட்டங்களாக சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடக்கின்ற பொறியியல் கலந்தாய்வில், முதல்கட்டமாக 6 ஆயிரத்து 740 மாணவர்கள் கலந்து கொண்டு, தங்களுக்கு விருப்பமான கல்லூரியைத் தேர்வு செய்தனர். அந்த வகையில், கடலூர் மாவட்டம் வீணங்கேணியைச் சேர்ந்த ராஜவேலு என்பவரின் மகன் ராஜதுரையால் அவர் விருப்பப்பட்ட கல்லூரியை தேர்வு செய்ய இயலவில்லை. காரணம், அவர் ஏற்கனவே சாய்ராம் கல்வி குழுமத்தின் இரு கல்லூரிகளைத் தேர்வு செய்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

200-க்கு 151 கட்ஆஃப் மதிப்பெண் பெற்றுள்ள ராஜதுரைக்கு வசதியாக, கடலூர் மாவட்டத்திலேயே அரசு பொறியியல் கல்லூரியில் காலியிடம் உள்ளது. பக்கத்து மாவட்டங்களிலும் நிறைய காலியிடங்கள் உள்ள நிலையில், தகுதி இருந்தும் அவரால் அவற்றை தேர்ந்தெடுக்க இயலவில்லை.

காரணம், கடந்த சில தினங்களுக்கு முன்பு மாணவரின் செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டு, தாம்பரம் சாய்ராம் பொறியியல் கல்லூரியில் இருந்து பேசுவதாக கூறி, மாணவரின் கவுன்சிலிங் தொடர்பான யூசர் நேம், பாஸ்வேர்டு போன்றவற்றை கேட்டுப் பெற்றுள்ளனர்.

அதைவைத்து கவுன்சிலிங்கில் சாய்ராம் பொறியியல் கல்லூரி, சாய்ராம் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட் ஆகிய இரு கல்லூரிகளை மட்டும் ராஜதுரை தேர்வு செய்தது போல பதிவு செய்துவிட்டு லாக் செய்துள்ளனர். இதனால் அந்த மாணவர் கவுன்சிலிங்கில், வேறு கல்லூரிகளைத் தேர்வு செய்ய இயலாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

ஒரு மாணவர் எத்தனை கல்லூரிகளை வேண்டுமானாலும் தேர்வு செய்து, கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் வசதிக்கு ஏற்ற விருப்பப்பட்ட கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என்ற விதி உள்ளது. இந்த நிலையில் தங்களது கல்லூரியின் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சாய்ராம் கல்லூரி நிர்வாகம், மாணவர்களிடம் செல்போனில் பேச்சுக்கொடுத்து நயவஞ்சகமாக தங்கள் கல்லூரியை மட்டும் தேர்வு செய்திருப்பது ஏமாற்று வேலை என்று மாணவனின் தந்தை வேதனை தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள சாய்ராம் கல்லூரி நிர்வாகம், தங்கள் கல்லூரியின் நற்பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற நோக்கில் தங்கள் கல்லூரி பெயரில் வேறு யாரோ சில நபர்கள், மாணவரிடம் அப்படி செய்திருக்கக் கூடும் என்று விளக்கம் அளித்தனர்.

பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை முறைகேடுகளை தடுக்கவே ஆன்லைன் மூலம் மாணவர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கல்வி நிறுவனங்கள் அதிலும் புகுந்து தங்களுடைய சித்து வேலைகளைக் காட்டிவருவதாகவும், தினமும் குறைந்தது 5 புகார்கள் வருவதாகவும் கூறப்படுகின்றது.

மாணவர்கள் சிறு பிள்ளைகள் போல யார் செல்போனில் பேசினாலும் யூசர் நேம் பாஸ்வேர்டை கொடுக்கக் கூடாது என்றும், யாராவது ஏமாற்றி பெற்றதாக புகார் அளித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மாணவர்கள் மீண்டும் கல்லூரிகளை தேர்வு செய்ய வழிவகை செய்யப்படும் என்றும் தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments