அசாம் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்களை புரட்டிப் போட்டுள்ள மழை வெள்ளம்

0 752

வட கிழக்கு மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் 28 லட்சம் பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வங்கதேசம், மியான்மர், நேபாள நாட்டிலும் மழை வெள்ளத்தால் பல்லாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடக்கு மாநிலங்களில் பருவமழை தீவிரமாக பெய்து வரும் நிலையில், அசாம், பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட வடகிழக்கில் உள்ள மாநிலங்களில் பருவமழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே மழையின் தீவிரம் அதிகரித்து உள்ளது.

தொடரும் மழையால் அசாம் மாநிலத்தின் வழியே ஓடும் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அந்த ஆற்றின் கரையில் உள்ள கவுகாத்தி, ஜோர்கட், தெஸ்பூர், கோல்பாரா, துப்ரி ஆகியவை உள்ளிட்ட  2217 ஊர்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது. 

பிரம்மபுத்திராவின் கிளை ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திப்ரூகர் வழியாக ஓடும் புர்கிதேகிங், லட்சுமிபூர் வழியாக ஓடும் சுபான்ஸ்ரீ, கோலகாட் வழியாக ஓடும் தான்ஸ்ரீ, சோனிட்பூர் வழியாக ஓடும் ஜியாபாரலி,உள்ளிட்ட 9 ஆறுகளும் அபாய அளவை தாண்டி பாய்கின்றன.

அசாம் மாநிலத்தில் மொத்தமுள்ள 33 மாவட்டங்களில் 28 மாவட்டங்களில்  வெள்ளத்தால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. பல நூறு கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 26 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர். இதில் பாஸ்கா மாவட்டத்தில் மட்டும் 3 லட்சம் பேர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாரபெட்டா மாவட்டத்தில் அதிக பட்சமாக 7 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.

இதே நேரத்தில் அந்த மாநிலத்தில் பல லட்சம் ஏக்கரில் விளைநிலங்களை வெள்ளம் மூழ்கடித்துள்ளது. 

இதனிடையே அசாம் மாநிலத்தில் கனமழை மேலும் சில நாட்களுக்கு தொடருமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து மீட்பு பணிகளுக்கு ராணுவத்தை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் அசாம் மாநில கூடுதல் தலைமை செயலாளர் குமார் சஞ்சய் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். 

இதனிடையேபீகார் மாநிலத்தில் கமலா மற்றும் கோசி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதன் கரையோரத்தில் உள்ள பல நூறு கிராமங்களில் வசிக்கும் சுமார் 2 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். அந்த மாநிலத்திலும் பல ஊர்களிலும் மழையாலும் வெள்ளத்தாலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதே போன்று இந்தியாவை ஒட்டி உள்ள வங்க தேசத்திலும் மழை வெளுத்து வாங்குகிறது. அந்த நாட்டின் சிட்டகாங் பிராந்தியதில் உள்ள 200 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 5 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். வெள்ளம் மற்றும் மண் சரிவால்  10 பேர் உயிரிழந்தனர்.

நேபாள நாட்டையும் கனமழை உலுக்கி எடுத்து வருகிறது. அந்த மாநிலத்தில் 22 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக நேபாள உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. வெள்ளம் மற்றும் மண் சரிவுகளில் சிக்கி 65 பேர் உயிரிழந்த தாக அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது. 38 பேர் காயமடைந்துள்ள நிலையில் மேலும் 30 பேரை காணவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தை போலவே மியான்மர் நாட்டின் வடக்கு மாவட்டமான காசினில் மட்டும் 14,000 பேர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். அளவு கடந்த வெள்ளத்தோடு பாயும் இராவாடி ஆறால், மைட்டிக்னியா நகரம் மிதக்கிறது. அங்கு வசிப்போரில் 4000 பேர் வீடுகள் இழந்து உள்ளனர். இதனால் கோவில்கள், பள்ளிகளில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments