என்ஐஏவுக்கு கூடுதல் அதிகாரம் வழிவகுக்கும் சட்டத்திருத்த மசோதா

0 1485

என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை, வெளிநாட்டிலும் விசாரணை நடத்த கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.

வெளிநாட்டிலுள்ள இந்தியர்களை குறி வைத்து நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களை விசாரிக்க தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. பயங்கரவாதம் தொடர்புடைய வழக்கை விரைந்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கவும் இந்த மசோதா வழிவகுக்கும். விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி.க்கள், என்ஐஏ அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்த இந்த மசோதா வழிவகுக்கும் என்று குற்றம்சாட்டினர். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் இதனால் பாதிக்கப்படலாம் என்று சில எதிர்க்கட்சி எம்பிக்கள் கவலை தெரிவித்தனர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பயங்கரவாதத்திற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதே நரேந்திரேமோடி அரசின் குறிக்கோள் என்றார். குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது அவர்கள் சார்ந்துள்ள மதத்தை பார்ப்பதில்லை என்று அவர் விளக்கம் அளித்தார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பொடா சட்டம் நீக்கப்பட்டதை அடுத்து, பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்ததை அவர் சுட்டிக்காட்டினார். மும்பை தாக்குதலுக்குப் பின் மீண்டும் தேசிய புலனாய்வு முகமையை அமைத்ததாக அவர் குறிப்பிட்டார்.

எனவே அனைத்து கட்சிகளும் இந்த மசோதா நிறைவேற ஆதரவு அளிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் 278 எம்பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 66 எம்பிக்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதனைத்தொடர்ந்து தேசிய புலனாய்வு முகமைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments