பொதுப் பணித்துறையில் ரூ.2,131 கோடி மதிப்பில் புதிய அறிவிப்புகள்

0 1055

கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை, 8 மாவட்டங்களில் 12 தடுப்பணைகள் என  பொதுப் பணித்துறை சார்பில் 20 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

சட்டப்பேரவையில், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை மீதான மானியக் கோரிக்கைக்கு பதில் உரை அளித்த பின்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதிய அறிவிப்புகளை  வெளியிட்டார்.

பொதுப் பணித்துறையில் 2 ஆயிரத்து 131 கோடியே 88 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களை அவர் அறிவித்தார். அதன்படி, நெல்லை மாவட்டம் தெற்கு கல்லிடைக்குறிச்சியில் எலுமிச்சையாறு ஆற்றின் குறுக்கே 110 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்த்தேக்கம் கட்டப்படும்.

சேலம் அக்ரஹாரம் கிராமத்தில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏரி அமைக்கப்படும், விழுப்புரம் மாவட்டம் சேந்தமங்கலத்தில் கசிவுநீர் குட்டை அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கூறினார்.

கரூர் மாவட்டம் நஞ்சை புகலூர் கிராமத்தில் 495 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் பொடங்கம், ராமநாதபுரம் மாவட்டம் செவ்வூர், குடியூர் கிராமங்களில் தடுப்பணைகள் கட்டப்படும்.

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர், பாண்டகப்பாடி, திருவண்ணாமலை வெங்களத்தூர், ஈரோடு மாவட்டம் ஜம்பை, சேலம் மாவட்டம் கோட்டைமேடு, கடலூர் மாவட்டம் சேப்பாக்கம், பூதாமூர், மதுரை மாவட்டம் சாத்தன்குடி, திரளி, ஆகிய கிராமங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் ராஜாமடம், பொன்னவராயன் கோட்டை கிராமங்களில் தடுப்பணையும், ஏனாதியில் தடுப்பணையுடன் கூடிய நீரேற்று பாசனத் திட்டமும் 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் சாத்தக்கோன்வலசையில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் 61 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம், செங்கல்பட்டு குளவாய் ஏரியை மீட்டெடுத்து சென்னையின் நீட்டிக்கப்பட்ட புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரம் மேம்படுத்தும் திட்டம் உள்ளிட்ட 20 புதிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments