கல்விக் கண் திறந்த கர்மவீரர் காமராஜரின் பிறந்த தினம் இன்று

0 589

ருப்புக் காந்தி, இந்திய அரசியலின் கிங் மேக்கர் என்று வர்ணிக்கப்பட்ட கர்மவீரர் காமராஜரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் கல்விக் கண் திறந்த அந்த மாபெரும் தலைவரை நினைவுகூரும் ஒரு செய்தி.

கரம்பை மண்ணும், கரிசல் காடும், கரிச்சான் குருவிகளும் கொண்ட தென் தமிழகத்தின் அன்றைய காலத்தில் அதிகம் அறியப்படாத விருதுபட்டியில் பிறந்த காமராசர் முதலமைச்சராக வலம் வந்த போது, எண்ணற்ற திட்டங்கள் மட்டுமே அவரின் சிந்தையில் இருந்தன.

அன்றைய காலகட்டத்தில் ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தால் மூடப்பட்ட 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளைத் திறக்க வைத்தவர் கர்மவீரர். 1954 தொடங்கி 1963 வரையிலான காமராசரின் ஆட்சிகாலம் தமிழகத்தின் பொற்காலம் என்றே இன்றளவும் புகழப்படுகிறது..! அவர் ஆட்சி பொறுப்பேற்ற போது 5 ஆயிரத்து 303 ஆக இருந்த ஆரம்ப பள்ளிகளின் எண்ணிக்கை, பத்தே ஆண்டுகளில் 26 ஆயிரத்து 700 ஆக உயர்த்தப்பட்டது.

இந்த நிலையில்தான் உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சிக் கல்லூரிகள் என திரும்பி திசையெங்கும் கல்வி நிலையங்களைத் திறந்து அகவிருள் அகற்றி அறிவொளி வீச வைத்தார் காமராசர்.

கல்வித் துறையில் மட்டுமல்லாமல், ‘நெய்வேலி நிலக்கரித் திட்டம்’, ‘பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை’, ‘திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்’, ‘கல்பாக்கம் அணு மின்நிலையம்’, ‘ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை’, ‘கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை’, ‘மேட்டூர் காகிதத் தொழிற்சாலை’, ‘சேலம் இரும்பு உருக்கு ஆலை’, ‘பாரத மிகு மின் நிறுவனம்’, ‘இரயில் பெட்டித் தொழிற்சாலை’, ‘நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை’ என மேலும் பல தொழிற்சாலைகளை உருவாக்கிய காமராசர் அன்றைய காலகட்டத்தில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கி ஒப்பற்ற தலைவராக உயர்ந்து நின்றார். 

தாகத்தால் தவித்த தமிழக மக்களின் தாகம் போக்க குமரி மாவட்டத்தில் மாத்தூர் தொட்டிப் பாலம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்,மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகிய ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி நீரியல் மேலாண்மைக்கு வித்திட்டவர் காமராசர்.

இதுபோக கன்னியாகுமரி நெய்யாறு திட்டம், கோவை பரம்பிக்குளம் -ஆழியாறு திட்டம், பவானி அணை, மேட்டூர் அணை என வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும் நீர்ப்பாசன திட்டங்களையும் ஆயிரத்து 600 ஏரிகளையும் வெட்டி, இன்றளவும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளின் பாசனத் திட்டங்களுக்கு முன்னோடித் தலைவராக இருப்பவரும், இருந்தவரும் காமராசர்தான்.

பிரதமர் பதவியை தமக்கு வேண்டாமெனத் தூக்கி எறிந்து லால் பகதூர் சாஸ்திரியையும், இந்திராவையும் பிரதமராக்கி கிங் மேக்கராக வலம் வந்த காமராசருக்கு வாரிசுகள் என யாரும் இல்லை.

இதனாலோ என்னவோ அவரது இறுதிக் காலத்தில் அவரிடம் இருந்த விலைமதிக்க முடியாத சொத்து என்றால் நான்கு கதர் வேட்டிகள், 4 கதர் சட்டைகளுமே. அதிலும் ஒன்று கிழிந்தது, இவை தவிர 350 ரூபாய் ரொக்கப்பணம் இவை மட்டுமே..!

தன்னலமிக்க தலைவரான காமராஜர் தொடங்கிய கல்விச் சாலைகளும், அவர் தொடங்கிய நீர்ப்பாசனத் திட்டங்களும் என்றென்றும் அவரின் பெருமையை உலகிற்கு உரக்கச் சொல்லும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments