துபாய் ஓட்டலில் நடிகை ஸ்ரீதேவி கொல்லப்பட்டாரா? போனிகபூர் பதில்

0 3119

துபாய் ஓட்டலில் உள்ள குளியல் தொட்டியில் நடிகை ஸ்ரீதேவி  நீரில் மூழ்கடித்து கொல்லப்பட்டதாக கேரள டிஜிபி ரிஷிராஜ்சிங் சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் ஸ்ரீதேவியின் கணவரும், அஜித்குமாரின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளருமான போனிகபூர் மவுனம் கலைத்துள்ளார்.

16 வயதினிலே படத்தில் மயிலாக வலம் வந்து தமிழக ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட நடிகை ஸ்ரீதேவி, நீண்ட காலமாக இந்தி திரை உலகின் கனவு கன்னியாக வலம் வந்தார்..

ஸ்ரீதேவியின் அழகில் மயங்கிய இந்தி திரை உலகின் முக்கிய தயாரிப்பாளரான போனிகபூர், தனது முதல் மனைவி மோனாவை விவாகரத்து செய்து விட்டு, 1996 ஆண்டு ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொண்டார். இருவரும் சேர்ந்து பல படங்களை தயாரித்து வந்தனர். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ள நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ந்தேதி உறவினர் திருமணத்திற்கு குடும்பத்துடன் துபாய் சென்றிருந்த நிலையில் அங்குள்ள நட்சத்திர ஓட்டலின் குளியல் தொட்டியில் மூழ்கி ஸ்ரீதேவி இறந்ததாக கூறப்பட்டது.

ஒரு வருடம் கடந்த நிலையில், நடிகை ஸ்ரீதேவி 1 அடி உயரமே தண்ணீர் கொண்ட குளியல் தொட்டியில் தவறி விழுந்து இறந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவரை யாரோ தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்திருக்க கூடும் என்றும் தனது நண்பரும் தடயவியல் நிபுணருமான உமாடாதன் தெரிவித்ததாக கேரள சிறைத்துறை டிஜிபி ரிஷிராஜ் சிங் கருத்து வெளியிட்டிருந்தார்.

மேலும் ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக கிடைத்துள்ள ஆதாரங்கள் மூலம் அவர் கொலை செய்யப்பட்டிருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்றும் ஒருவர் எவ்வளவு தான் மது அருந்தியிருந்தாலும் 1 அடி உயரம் தண்ணீர் உள்ள குளியல் தொட்டியில் மூழ்கி உயிரிழக்க வாய்ப்பில்லை என்றும் சர்ச்சையை கிளப்பினார். தற்போது தடயவியல் நிபுணர் உமாடாதன் உயிரோடு இல்லாத நிலையில் கேரள டிஜிபியின் கருத்து போனிகபூர் குடும்பத்தினரை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது.

இந்த கருத்து வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையில் போனிகபூர் தற்போது மவுனம் கலைத்துள்ளார். நடிகர் அஜீத்குமாரை வைத்து தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்துவரும் போனிகபூரிடம் ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பாக டிஜிபி ரிஷிராஜ் சிங் தெரிவித்துள்ள கருத்து குறித்து கேட்ட போது, இது போன்ற அடிப்படை ஆதாரமற்ற கதைகளுக்கு தான் பதில் அளிக்க விரும்பவில்லை என்றும் இது போன்ற கதைகள் தொடர்ந்து கூறப்பட்டு வருவதாகவும் இவை அவர்களின் கற்பனையின் வெளிப்பாடு என்றும் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் போனிகபூர் தயாரித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் வெளியீட்டு உரிமையை குறைந்த விலைக்கு கைப்பற்றுவதற்காக, முக்கிய சினிமா வினியோகஸ்தர்கள் சிலர் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டு படத்தை மற்ற நிறுவனங்களை வாங்க விடாமல் தடுத்து வரும் நிலையில் மனைவி ஸ்ரீதேவி கொல்லப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சையால் போனிகபூர் மிகுந்த குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments