தலை கவசம் அணியாத காவலர்கள்.... அதிகாரிகள் எச்சரிக்கை..!

0 351

சென்னையில், தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை நிறுத்தி அபராதம் வசூலிக்கும் காவல்துறையினரில் சிலரே, தலைகவசம் அணியாமல் வாகனங்களை ஓட்டிச் செல்கின்றனர். போக்குவரத்து காவல் அதிகாரி ஒருவர் தலைகவசம் அணியாமல் சென்று விபத்தில் உயிரிழந்த நிலையில், தலைகவசம் அணியாத காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

தலைகவசம் தான் இரு சக்கர வாகன ஓட்டிகளின் உயிர் கவசம் என்பது, விபத்தில் சிக்கி மீண்டவர்கள் மூலம் உணர வேண்டிய ஒன்று. தலைகவசத்தின் அவசியத்தை விழிப்புணர்வு மூலம் போலீசார் அறிவுறுத்தி வந்த வேளையில், சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலமே அதனைப் பின்பற்ற வைக்க முடியும் என சாட்டை சுழற்றியது நீதிமன்றம். அதன் விளைவு, இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமல்ல- பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைகவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இருப்பினும், சென்னையில் ஏற்படும் விபத்துகளில் தலைக் கவசம் அணியாதவர்கள்தான் அதிகளவில் உயிரிழக்கிறார்கள் என்பது போக்குவரத்து போலீசார் தரும் புள்ளி விவரங்கள் மூலம் தெளிவாகிறது. அதன்படி சென்னையில் கடந்த 2017ம் ஆண்டில் 7 ஆயிரத்து 517 விபத்துகளில் ஆயிரத்து 347 பேர் உயிரிழந்ததாகவும், கடந்தாண்டு பதிவாகியுள்ள 7 ஆயிரத்து 794 விபத்துகளில் ஆயிரத்து 297 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. நடப்பாண்டில் 689 விபத்துகளில் 103 பேர் உயிரிழந்திருப்பதாக புள்ளி விவரம் கூறுகிறது.

கடந்தாண்டு ஏற்பட்ட விபத்து உயிரிழப்புகளில் 61 சதவீதம் பேர் இரு சக்கர வாகன ஓட்டிகள் தான் என்பதை சுட்டிகாட்டும் காவல் துறையினர், 2018-ம் ஆண்டில் பலியான 792 இரு சக்கர வாகன ஓட்டிகளில் 98 சதவீதம் பேர், அதாவது 769 பேர் தலைகவசம் அணியாததால் பலியானவர்கள் என்கின்றனர்.

ஒரு பக்கம் விபத்துகளும், உயிர்ப்பலியும் அதிகரித்து வர, மறுபக்கம் வாகன சோதனையும் வழக்குகளும் தீவிரபடுத்தப்பட்டு வருகிறது. தலைகவசம் அணிவது குறித்து வாகன சோதனையில் சிக்குபவர்களுக்கு அறிவுறுத்தும் போக்குவரத்து போலீசாரில் பலர் தலைகவசம் அணிவதில்லை. வியாழக்கிழமை அன்று போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜ் தலைகவசம் அணியாமல் வாகனத்தில் சென்று விபத்தில் பலியான சம்பவம் காவல் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து நடந்த மறுநாள், சென்னை சாலைகளில் தலைகவசம் இன்றி போலீசார் வாகனங்களை ஓட்டிச் சென்ற காட்சிகள் இவை

போக்குவரத்து விதிகளை பின்பற்ற பொதுமக்களுக்கு அறிவுறுத்தும்முன் காவல் துறையினர்தான் முழு வீச்சில் அதனைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்துகிறார் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன்

தமிழக டிஜிபி திரிபாதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இரு சக்கர வாகனம் ஓட்டும்  காவலர்கள் மட்டுமல்லமால் பின்னால் அமர்ந்து செல்லும் காவலர்களும் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். விதிகளை மீறும் போலீசார் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ஆனால், தலைகவசம் அணியாத பொதுமக்கள் மட்டுமே சோதனையில் சிக்கிவிட, விதிகளை காற்றில் பறக்கவிட்டு தலைகவசம் அணியாமல் உலவும் காவலர்களை போக்குவரத்து போலீசார் கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments