கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர குமாரசாமி முடிவு

0 447

கர்நாடக சட்டமன்றத்தில் குமாரசாமி தலைமையிலான கூட்டணி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எம்.எல்.ஏக்களை பலத்த பாதுகாப்புடன் சொகுசு விடுதிகளில் தங்க வைத்துள்ளன.

கர்நாடக சட்டமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கப் போவதாக அறிவித்துள்ளார். காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தள கூட்டணிக்கு 116 உறுப்பினர்கள் இருந்த நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் 16 பேரின் ராஜினாமா ஏற்கப்பட்டால் அதன் பலம் 100 ஆக குறையும்.இரண்டு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் அரசுக்கு தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டுள்ளனர். எனவே அந்த கூட்டணி பெரும்பான்மை தகுதியை இழந்துவிடும் என்று கூறப்படுகிறது.

வரும் செவ்வாய்க்கிழமைக்குள் எம்.எல்.ஏக்கள் ராஜினாமா குறித்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் அவர்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அடுத்த வாரம் கர்நாடக சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அரசு தயாராகி வருகிறது.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அனைவரும் பெங்களூர் அருகில் உள்ள சொகுசு விடுதியில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதே போல் பாஜகவும் தங்களது எம்.எல்.ஏக்களை நட்சத்திர விடுதியில் பாதுகாப்புடன் தங்க வைத்துள்ளது.

அதிருப்தி காங்கிரஸ் எம்.எல்,ஏக்கள் மும்பையில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். மும்பை சித்திவிநாயகர் கோவிலுக்கு ஒன்றாக சென்று அவர்கள் தரிசனம் செய்தனர்.

இதனிடையே அகமதாபாதில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, பணபலத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளைக் கவிழ்க்கும் வேலையில் பாஜக ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற்ற குதிரைபேரம் தற்போது கர்நாடகத்தில் நடப்பதாக அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments