சுதந்திர போராட்ட தியாகிக்கு மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்க உத்தரவு

0 263

சுதந்திர போராட்ட தியாகிக்கு, மத்திய அரசு ஓய்வூதியம் வழங்கும்படி தனி நீதிபதி அளித்த தீர்ப்பை,  உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசின் ஓய்வூதியம் பெரும் மதுரையை சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகி ராமலிங்கம் என்பவர், நாட்டின் விடுதலைக்காக சிறை வாசம் அனுபவித்ததாக கூறி மத்திய அரசின் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்தார்.

ஆனால் இவரது கோரிக்கையை ஏற்க மறுத்த மத்திய அரசு,ராமலிங்கம் சிறையிலிருந்த போது, உடன் இருந்த இருவரின் சான்றிதழ்களை வழங்கவும், மத்திய அரசின் ஓய்வூதியம் பெற மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் என கோரியது. இதையடுத்து ராமலிங்கம் தன்னுடன் சிறையிலிருந்த  மாயாண்டி பாரதி என்பவரின் சான்றிதழை சமர்பித்தும், மத்திய அரசு கோரிக்கையை நிராகரித்தது.

இதுகுறித்து ராமலிங்கம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு அளித்ததன் பயனாக, மத்திய அரசு பென்ஷன் வழங்க தனிநீதிபதி உத்தரவிட்டார். இருப்பினும்  இதனை எதிர்த்து  உள்துறை அமைச்சகத்தின் துணை செயலர் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் கே. ரவிச்சந்திரபாபு, ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தியாகி ராமலிங்கம் விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என குறிப்பிட்ட நீதிபதிகள், மத்திய அரசின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து,  4 வாரத்துக்குள் ராமலிங்கத்துக்கு மத்திய அரசின் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments