காவல்துறையினரை பாதுகாக்க வேண்டும் ! - நீதிபதி

0 620

நேர்மையான காவல்துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தமிழக அரசை கேட்டுக்கொண்டார். 

சிவகங்கை தாலுகா காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர் மீது சொத்து தொடர்பான வழக்கு ஒன்றில் நடவடிக்கை எடுக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கருத்து தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், வழக்குப்பதிவு செய்யும் காவல் அதிகாரிகளை மிரட்டும் போக்கு தமிழகத்தில் அதிகரித்துள்ளதாகக் கூறினார்.

வழக்கில் தொடர்புடையவர்களும் அவர்களின் உறவினர்களும் இவ்வகை செயல்களில் ஈடுபடுவதாக வேதனை தெரிவித்த நீதிபதி, வழக்குப்பதிவு செய்வதில் விதிமீறல் இருந்தால் மட்டுமே அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குற்ற வழக்கில் தொடர்புள்ளவர்களின் இதுபோன்ற நடவடிக்கைகளை நீதிமன்றம் ஊக்குவிக்காது என்று கூறிய நீதிபதி, அதேசமயம் அரசு ஊழியர்கள், காவல் துறை அதிகாரிகள் சட்டப்படி வரையறுக்கப்பட்ட தங்களது பொறுப்பு மற்றும் கடமைகளை நிறைவேற்றவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். காவல்துறையினரை மறைமுகமாக மிரட்டும் வகையில் உயர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதாகக் கூறிய நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், பொய்யான தகவல்களுடன் வழக்கு தொடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

விதிகள் படி பணி செய்ய மறுக்கும் அரசு ஊழியர்கள் மீது ரிட் மனு அடிப்படையில் நடவடிக்க எடுக்கலாம் என்றும் நீதிபதி கூறினார். வெற்றுக் காரணங்களுடனும் காவல்துறையினரை மிரட்டும் வகையிலும் தாக்கல் செய்யும் மனுக்களை அதிகபட்ச அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்ட நீதிபதி, நேர்மையான அதிகாரிகளுக்கு விருது கொடுத்து பாராட்டினால் அவர்கள் பொதுமக்கள் எதிர்பார்க்கும் அளவில் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவார்கள் என்றார்.

காவல்துறையினர் மன அழுத்தத்தில் பணிபுரிகின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறிய நீதிபதி, அப்படிப்பட்டவர்களை நீதிமன்றமும் உயரதிகாரிகளும் பொதுமக்களும் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். சட்டப்படியான கடமைகளை நிறைவேற்றும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் கூறினார்.

நேர்மையான காவல்துறை அதிகாரிகளை ஊக்கப்படுத்துவதில் காட்டும் ஆர்வம், ஊழல் காவல்துறை மீது நடவடிக்கை எடுப்பதிலும் இருக்க வேண்டும் என தமிழக அரசை நீதிபதி கேட்டுக்கொண்டார்.

விசாரணைக்கு வந்த வழக்கில் மனுதாரருக்கும், அவரது சகோதரர்களுக்கும் இடையிலான சொத்து பிரச்சினை அடிதடியில் முடிந்து குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எனவே வழக்கை மனுதாரர் சட்டப்படி சந்திக்க வேண்டும் என்றும் கூறி நீதிபதி மனு தள்ளுபடி செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments