கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் உச்சநீதிமன்றத்திற்கு சவால் விட முயற்சிக்கிறாரா? - நீதிபதிகள் கேள்வி

0 1988

ர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய கூடாது என்றும் ஆணையிட்டிருக்கிறது. 

கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ராஜினாமா கடிதங்கள் மீது நேற்றைக்குள் முடிவெடுக்குமாறு சபாநாயகரை கேட்டுக் கொண்டது.

மேலும், அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும், சபாநாயகர் முன் ஆஜராகவும் ஆணையிட்டது. இதன்படி, மும்பையிலிருந்து, பெங்களூரு வந்த 10 எம்எல்ஏக்களும், சபாநாயகர் ரமேஷ் குமார் முன் ஆஜராகி, புதிய ராஜினாமா கடிதங்களை கொடுத்தனர். இதன்பின்னர் பேசிய சபாநாயகர் ரமேஷ் குமார், அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது, மின்னல் வேகத்தில், முடிவெடுக்க முடியாது எனக் கூறினார்.

இந்நிலையில், கர்நாடக அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ராஜினாமா முடிவின் மீது சபாநாயகர் முடிவெடுக்காமல் காலந்தாழ்த்துவதாக வாதிட்டார்.

ராஜினாமா முடிவை உயிர்ப்போடு வைத்திருந்து, அதன்மூலம், அந்தந்த கட்சிகளின் கொறடா கட்டுப்பாட்டில் எம்எல்ஏக்களை கொண்டு செல்ல சபாநாயகர் முயற்சிப்பதாகவும், மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, குற்றம்சாட்டினார்.

அப்போது, குறுக்கிட்ட, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர், உச்சநீதிமன்ற அதிகாரத்திற்கு சவால் விடும் வகையிலல் செயல்படுகிறாரா எனக் காட்டமாக கேள்வி எழுப்பினார்.

அப்போது, கர்நாடக சபாநாயகர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, சபாநாயகர் ரமேஷ் குமார், கர்நாடக சட்டப்பேரவையின் மூத்த உறுப்பினர் என்றார். சபாநாயகர், அரசியலமைப்பு பதவி வகிப்பவர் என்று வாதிட்ட அபிஷேக் மனு சிங்க், பேரவை தலைவருக்கான அதிகாரங்களை, சட்டக்கூறுகளை பட்டியலிட்டார்.

முதலமைச்சர் குமாரசாமி தரப்பில் ஆஜரான, உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், சபாநாயகரிடம் நோட்டீஸ் அளித்து கருத்துக் கேட்காமல், நேற்றைய உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்திருப்பதாக கூறினார். அந்த அதிருப்தி எம்எல்ஏக்களில், ஒருவர் மீது முறைகேடு புகார் இருப்பதால், அவர்கள் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடுமுன், தங்கள் தரப்பு வாதத்தையும் கேட்குமாறு, வலியுறுத்தினார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, அதிருப்தி எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்கள் மீது, செவ்வாய்கிழமை வரை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்க கூடாது என்றும், அவர்களை தகுதி நீக்கம் செய்வது போன்ற முடிவுகளையும் எடுக்க கூடாது என்றும், சபாநாயகருக்கு உத்தரவிட்டது.

எம்எல்ஏக்கள் பிரச்சினை, அரசியல் சாசன விவகாரம் என்பதால், இதுகுறித்து விரிவாகவும், கவனமாகவும் விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. எனவே, அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரத்தில், தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டிருக்கும் உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை, வருகிற செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments