கூவம், பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்காத தமிழக அரசுக்கு ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டதற்கு தடை விதிக்க மறுப்பு

0 967

சென்னையில் ஓடும் ஆறுகளை பராமரிக்கத் தவறியதாக தமிழக அரசுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை, உயர்நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. இந்த உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் ஓடும் ஆறுகளான கூவம், அடையாறு மற்றும் பக்கிங்காம் கால்வாய் உள்ளிட்ட நீர்நிலைகளை பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து, கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது. ஏப்ரல் 23ம் தேதி நேரில் ஆஜராகுமாறு, அப்போதைய தலைமைச் செயலாளருக்கும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் குழுவை நியமித்து, 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய அறிவியல் கழகம் ((IASE)), நீரி ((NEERI)) அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களில் இருந்து, தலா ஒருவர் அடங்கிய குழு அமைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வில் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்க மேற்கொண்ட நடவடிக்கைகளை கருத்தில் கொள்ளாமலும், கூவம் நதியை சுத்தப்படுத்த 604 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதை கருத்தில் கொள்ளாமலும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசுத்தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் ஏற்கனவே தீர்ப்பாயம் 2 கோடி ரூபாய் அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளதையும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர முடியும் எனவும், சென்னை உயர்நீதிமன்றத்தை நாட முடியாது என்றும் குறிப்பிட்டனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால், ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாகவும், தீர்ப்பாய உத்தரவை உறுதி செய்வதாகவும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். தமிழக அரசின் மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments