அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் இன்று வருகை - கோவில் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு

0 941

காஞ்சிபுரத்தில் இன்று,  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், அத்திவரதர் தரிசனத்துக்கு வருகை தர இருப்பதையொட்டி தரிசன நேரம் குறைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்தி வரதர் உற்சவத்தின் 12 ஆம் நாளான இன்று அத்தி வரதருக்கு காவி நிற பட்டாடை அணிவித்து திருவாராதனம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்கரித்து, அதிகாலை 5 மணி முதல் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். தமிழகம் மட்டுமல்லாது, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகாலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

11 வது நாளான நேற்று வரை 12 லட்சத்து 35 ஆயிரம் பேர் சுவாமியை தரிசித்துள்ளதாகவும், நேற்று ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதுடன், கடந்த 4 நாட்களில், 4 லட்சத்து 50 ஆயிரம் பக்தர்கள் தரிசித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இன்று குடியரசு தலைவர் வருகையை யொட்டி காஞ்சிபுரத்தில் கோவிலைச்சுற்றிலும் பலத்தபாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதுடன், பிற்பகல் 1 மணிமுதல் மாலை 5 மணிவரை பொது தரிசனமும், காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விஐபி தரிசனம் நிறுத்தி வைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக, விஐபி வரிசையில் அதிக அளவில், ஆட்சியர் மற்றும் நன்கொடையாளர் பெயரில், போலி பாஸ் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால், இனி போலி பாஸ் வைத்திருப்போர் மீது, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காவல்துறை டிஜிபி ஜே.கே.திரிபாதி நேரில் ஆய்வு மேற்கொண்டார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments