குடி மராமத்தா? குழி மராமத்தா? மணல் திருட்டுக்கு புது ரூட்டு

0 498

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே குடிமராமத்து பணி என்ற பெயரில் ஏரியை பெரும் குழியாக்கி, வருவாய்துறை அதிகாரிகளின் துணையுடன் செம்மண் கொள்ளை நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது

தமிழகத்தில் ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை பராமரிப்பதற்காக கரைகளை பலப்படுத்தி மேம்படுத்தவும், 3 அடி ஆழத்திற்கு ஆழப்படுத்தவும் தமிழக அரசு குடிமராமத்து திட்டத்தை அறிமுகப்படுத்தி செயல்பட்டு வருகிறது.

அதன் பேரில் ஏரி,குளங்களில் அள்ளப்படும் வண்டல் மண்ணை, அனைத்து விவசாயிகளும் இலவசமாக எடுத்து கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது.

இதில் சில கட்டுப்பாடுகளையும், விதிகளையும் அரசு அமல்படுத்தியுள்ளது. ஏரியின் கரை ஓரத்தில் இருந்து சுமார் 20 அடி தூரத்தில் தான் மண் எடுக்க வேண்டும், அதே போல மூன்று அடி ஆழம் மட்டுமே தோண்ட வேண்டும், அவ்வாறு எடுக்கப்படும் மண்ணை, பஞ்சாயத்து ஏரி என்றால் சம்பந்தப்பட்ட வருவாய் அலுவரிடம் அனுமதி பெற்று, பின்னர் கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில் அளந்து வழங்கப்பட வேண்டும். அதே போல் பொதுப்பணி துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரியாக இருந்தால், பொதுப்பணி துறை அதிகாரிகள் நேரில் சென்று அளந்து கொடுக்க வேண்டும்.

அவ்வாறு எடுக்கப்படும் மண்ணை, டிராக்டர் கொண்டு மட்டுமே எடுக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன.

இந்த நிலையில் , விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள வடமருதூர் ஏரியில் வண்டல் மண் எடுப்பதாக கூறி, விதியை மீறி கிட்டத்தட்ட 50 அடி ஆழத்திற்கு மேல் குழி தோண்டி செம்மணை எடுத்து விற்றுவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 10க்கும் மேற்பட்ட டிராக்டரில் சுழற்சி முறையில் செம்மண் எடுக்கப்படுவது தெரிய வந்தது.

அளவிற்கு அதிகமாக குழி தோண்டி செம்மண் எடுத்து உள்ளதால் மழை பொழிந்து அதில் நீர் தேங்கும் போது, அது உயிரிழப்புக்கு வழிவகை செய்யும் வகையில் உள்ளது என்றும், பொய்யாக வண்டல் மண் எடுப்பதாக கூறி ஏரியில் உள்ள செம்மண்ணை எடுத்து தற்போது நிலத்தடி நீர் மட்டம் அதலபாதாளத்தில் சென்று விட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இது குறித்து அப்பகுதி வருவாய் ஆய்வாளரிடம் கேட்டபோது, அவர் சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டுக் கூறுவதாக கூறினார். சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டபோது, தான் புதிதாக வந்த அலுவலர் என்பதால் தனக்கு எதுவும் தெரியாது என கூறிய நிலையில், அங்கிருந்த ஜேசிபி ஓட்டுனர் விதியை மீறி மண் அள்ளுவதை ஒப்புக் கொண்டார்

 

எனவே மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு, அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments