நீண்ட காலமாக காலி செய்ய மறுப்போருக்கு இரட்டிப்பு வாடகை

0 2680

ஒப்பந்தம் முடிந்த பின்னரும் வீட்டை காலி செய்ய மறுத்தால் இரட்டிப்பு வாடகையை கொடுக்க வழிவகுக்கும் புதிய வீட்டு வாடகை சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு பரிசிலீத்து வருகிறது.

நாடு முழுவதும் வீட்டையும் அலுவலகத்தையும் வாடகைக்கு விடுவோரை முறைப்படுத்த அரசு புதிய சட்டவரைவு மசோதா தயாரித்துள்ளது. இதன்படி வீட்டு உரிமையாளர் வாடகையை உயர்த்துவதற்கு மூன்று மாதம் முன்பாக எழுத்துப்பூர்வமான நோட்டீசை வாடகைதாரர்களுக்கு வழங்க வேண்டும். வாடகைக்கு குடியேறுவோரிடம் உரிமையாளர் இரண்டு மாத வாடகைக்கான தொகையை மட்டும் முன்பணமாக பெற வேண்டும். வாடகைக்கு விடுவோர், வாடகைக்கு இருப்போர் இருவரும் தனித்தனியாக வாடகை ஒப்பந்தத்தின் நகலை தாக்கல் செய்ய வேண்டும்.

வீட்டைப் பழுது பார்க்கும் செலவை வீட்டு உரிமையாளர் தர மறுத்தால் வாடகையில் கழித்துக் கொள்ளவும் இச்சட்டம் வகை செய்கிறது. வாடகை தொடர்பாக பிரச்சினை எழுந்தால் வாடகைக்கு இருப்பவரோ உரிமையாளரோ புகார் அளிக்கும்பட்சத்தில் மாவட்ட குடியிருப்பு அதிகாரி வீட்டு வாடகையை நிர்ணயம் செய்யலாம்.

இதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் வழக்கறிஞர்கள் குழு ஒன்று நியமனம் செய்யப்படும். ஒப்பந்தம் முடிந்த பிறகும் வீட்டைக் காலி செய்ய மறுத்து குடியிருப்பவர்களுக்கு முதல் 2 மாதங்கள் வாடகையை இரட்டிப்பாகவும் பின்னர் நான்கு மடங்காகவும் உயர்த்தப்படும்.

இச்சட்ட வரைவு மசோதா குறித்து மக்களிடம் கருத்துக் கேட்க அரசு ஆகஸ்ட் முதல் தேதி வரை காலக்கெடு விதித்து, model tenany act 2019 என்ற பெயரில் இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளது.

எந்த வித வருமான வரி கணக்கும் காட்டாமல் வாடகை வசூலிப்போரை வழிக்கு கொண்டு வரும் வகையில் இந்த மசோதா அமைந்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 1 கோடி வீடுகள் காலியாக இருப்பதாக இதுவரை கணக்கு காட்டப்பட்டு வந்தது. இந்த வீடுகளில் வீடற்றவர்களை குடியேற்றவும் இச்சட்டம் பயன்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தை பயன்படுத்துவதற்கும் நிராகரிப்பதற்குமான உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments