விபத்துகளில் முந்தும் ஓசூர்..! தடுப்பதற்கு காவல்துறை நடவடிக்கை

0 493

தமிழகத்தின் எல்லையோர மாநகராட்சியான ஓசூர் விபத்து நிறைந்த மாநகராகி வருகிறது. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அந்த மாநகரில் நடைபெற்ற விபத்துகளில் 150 பேர் உயிரிழந்த நிலையில், ஹெல்மட் அணியாதவர்களை முக்கிய சாலைகளில் அனுமதிப்பதில்லை என காவல்துறை முடிவெடுத்துள்ளது....

தமிழகத்தில் மாவட்ட தலைநகரமில்லாத ஒரே மாநகராட்சி என்ற பெருமைக்கு உரியது ஓசூர். தொழில் நகரம் என்பதால் அங்கு வசிப்போரின் எண்ணிக்கை உயர்வதை போலவே வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் ஓசூரில் வாகன  விபத்துகளும், போக்குவரத்து விதி மீறல்களும் அதிகரித்துள்ளன.

ஓசூரில் கடந்த 6 மாதங்களில் நடைபெற்ற சாலை விபத்துகளில் 150 பேர் பலியாகினர். 388 பேர் காயமடைந்துள்ளனர். இதுதொடர்பாக 136 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே நேரத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்வது, குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது என்று போக்குவரத்து விதிகளை மீறுவதும் ஓசூரில் அதிகரித்து வருகிறது. கடந்த  6 மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிமீறல் தொடர்பாக 16,117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம்  19,77,200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.

சாலை விபத்துக்கள் அதிகரித்து வருவதால், ஓசூர் போக்குவரத்து போலீசார் "விபத்தில்லா ஓசூர்"  என்ற தலைப்பில் தலைக்கவசம் அணிவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வாகன ஓட்டிகளுக்கு வழங்குவதோடு,வருவோருக்கு அதன் ஆபத்தை விளக்க, எமன் வேடமிட்ட ஒருவரை கொண்டு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

இதனிடையே ஓசூரில் இனிமேல் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை முக்கிய சாலைகளில் அனுமதிப்பது இல்லை என்று போக்குவரத்து போலீசார் முடிவு செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த திட்டம் நடைமுறைக்கு வர உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

முதல் கட்டமாக ஓசூர் எம்ஜி சாலையில், தலைக்கவசம் அணிந்தவர்களை மட்டுமே அனுமதித்தனர். தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை அனுமதிக்காமல் எச்சரித்து திருப்பி அனுப்பி வைத்தனர்.

வாகனம் மற்றும் மக்களின் எண்ணிக்கை பெருகி வழியும் இந்த கால கட்டத்தில் வாகன ஓட்டிகள் தங்களின் பாதுகாப்பிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உயிர் காக்கும் ஹெல்மெட்களை அணிவதை கவுரவ குறைச்சலாக கருதாமல், உயிரை காக்கும் கவசமாக கொள்ள வேண்டும். அவசரமாக பயணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாலை விதிகளை காற்றில் பறக்க விடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும், குடித்து விட்டு வாகனங்களை ஒட்டுவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் இவற்றை செய்தாலே விபத்துகள் குறையுமென ஓசூர் காவல்துறை கூறியுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments