நடிகையை காரில் இருந்து தூக்கி வீசிய டிரைவர்..! முகநூல் புகாரில் நடவடிக்கை

0 3047

டிவி சீரியல் படப்பிடிப்பிற்கு உபர் நிறுவன வாடகை காரில் சென்ற  நடிகையை காரில் இருந்து வெளியே தூக்கி வீசியதாக கார் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முகநூல் வாயிலாக நடிகை அளித்த புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

ஸ்வஸ்திகா தத்தா என்ற வட மொழி நடிகை தான் காரில் இருந்து தூக்கி வீசப்பட்டவர்..!

கொல்கத்தாவில் வசித்துவரும் நடிகை ஸ்வஸ்திகா தத்தா ஒரு சில படங்களிலும், வங்காள மொழி தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகின்றார்.

கொல்கத்தாவின் டில்ஜலா பகுதியில் வசித்துவரும் ஸ்வஸ்திகா தத்தா தனது வீட்டில் இருந்து புதன் கிழமை படப்பிப்பில் கலந்து கொள்ள ஸ்டூடியோ செல்வதற்காக உபர் நிறுவன வாடகை கார் ஒன்றை முன்பதிவு செய்துள்ளார். கார் வந்தவுடன் அதில் ஏறி படப்பிடிப்பு தளத்திற்கு சென்றுள்ளார். வழியில் காரை திருப்பிய ஓட்டுனர் தனக்கு வேறு ஒரு சவாரி வந்து விட்டதாக கூறி காரில் இருந்து இறங்க கூறியுள்ளான். ஆனால் அவர் இறங்க மறுத்துள்ளார்.

இதனால் காரை மீண்டும் அவரது வீடு இருக்கும் பகுதிக்கே கொண்டு வந்து காரில் இருந்து இறங்கிச்செல்ல கூறி மிரட்டி உள்ளான். ஆனால் அவரோ தன்னை ஸ்டுடியோவில் விட்டு விட்டு அடுத்த சவாரிக்கு செல்லும் படி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கார் ஓட்டுனர் , காரில் இருந்த ஸ்வஸ்திகா தத்தாவை குண்டுகட்டாக தூக்கி காரில் இருந்து வெளியே வீசிவிட்டு அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

உபர் நிறுவன வாடகை கார் பயணத்தில் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை முக நூலில் ஸ்வஸ்திகா தத்தா படங்களுடன் பதிவிட்டார்.

அவரது முக நூல் பதிவை பார்த்த ஆயிரக்கணக்காணோர் காவல்துறையின் முக நூலுக்கு இந்த பதிவை பகிர்ந்துள்ளனர்.

இதனையே புகாராக எடுத்துக் கொண்ட கொல்கத்தா காவல்துறையினர் உடனடியாக சம்பந்தபட்ட காரின் பதிவு எண்ணை கொண்டு ஓட்டுனர் ஜாம் செட் என்பவனை உடனடியாக கைது செய்துள்ளது.

காவல்துறையினரின் விசாரணையில் ஸ்வஸ்திகா தத்தாவை அழைத்து செல்வதை விட புதிதாக தனக்கு வந்த சவாரியை அழைத்து சென்றால் கூடுதலாக கமிஷன் கிடைக்கும் என்பதால் தான் அவ்வாறு நடந்து கொண்டதாக ஓட்டுனர் ஜாம் செட் விளக்கம் அளித்துள்ளார்.

இருந்தாலும் பெண் என்றும் பாராமல் அவரை ஆபாசமாக பேசி, தொட்டு இழுத்து தூக்கி வெளியே பிடித்து தள்ளியது குற்றம் என்பதால் ஓட்டுனரை கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாடகை காரில் தனியாக செல்லும் பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகள் குறித்து எப்போது வேண்டுமானாலும் காவல்துறைக்கு புகார் அளிக்கலாம் என்றும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கொல்கத்தா காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர். கொலகத்தா காவல்துறையினரின் சேவைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.

ஒரு பெண்ணின் முகநூல் பதிவையே புகாராக எடுத்து உடனடியாக விசாரித்து, வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும் கொல்கத்தா காவல்துறை போல நம்ம ஊர் காவல்துறையும் அனைத்து வழக்குகளிலும் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டால் எவ்வளவு சிறப்பாக இருக்கும்..? என்பதே நம்மவர்களின் ஆதங்கமாக உள்ளது..!

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments