போலி "புன்னகை மன்னன்" - விடுதியில் காதலர்கள் தற்கொலை முயற்சியில் திடீர் திருப்பம்

0 698

சென்னையில் கடந்த மாதம் விடுதியில் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில் காதலி உயிரிழந்து விட காதலன் உயிர் பிழைத்தார். புன்னகை மன்னன் படத்தில் வருவது போல் இது தற்செயலாக நடந்திருக்கும் என்று முதலில் கருதப்பட்ட சூழலில், திடீர் திருப்பங்களுடன் கொலை வழக்காக மாறிய பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி...

புன்னகை மன்னன் திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தக் காட்சியில் கமல்ஹாசன் மட்டும் உயிர் பிழைத்து விட, ரேகா பரிதாபமாக உயிரிழப்பார். இதில் கமல்ஹாசன் உயிர் பிழைப்பது தற்செயலாக நடந்தாக இருக்கும்.

ஆனால் தற்கொலைக்கு மனமே இல்லாமல் காதலியை மட்டும் சயனைடு சாப்பிட வைத்து, அவரை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு கடைசி நேரத்தில் உயிர் தப்பிய காதலன் தற்போது போலீசில் சிக்கிய சம்பவம் திருவல்லிக்கேணியில் நடந்துள்ளது.

கடந்த மாதம் 10ஆம் தேதி, காதல் ஜோடி ஒன்று திருவல்லிக்கேணி மியான் சாகிப் தெருவில் உள்ள எம்டிசி விடுதியில் அறை எடுத்து தங்கியது. மறுநாள், அந்த ஜோடி அறையை விட்டு வெளியில் வராமல் இருக்கவே சந்தேகம் அடைந்த ஊழியர்கள், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று அறையின் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, இளம்பெண் உயிரிழந்து கிடக்க, இளைஞர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அறையில் குளிர்பான பாட்டில் கிடந்ததால் விஷத்தை அதில் கலந்து அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள், செளகார்பேட்டையைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சுமர் சிங் மற்றும் கல்லூரி மாணவி காஜல் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்ததும் உறுதியானது. சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவல்லிக்கேணி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையின் போது காதலனிடம் பெற்ற சில தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கவே போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் இறந்துபோன காஜலின் பிரேத பரிசோதனை அறிக்கையில், அவர் சயனைடு உட்கொண்டு இருப்பதும், கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி தகவலும் தெரிய வரவே விசாரணையின் கோணம் காதலன் பக்கம் திரும்பியது. அதேவேளையில் அளவுக்கு அதிகமான சயனைடு உடலில் கலந்து காஜல் உயிரிழந்திருக்க, சுமர் சிங் மட்டும் லேசான பாதிப்புடன் உயிர் பிழைத்ததும் அவர் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியது.

போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் சுமர் சிங்கின் நாடகம் அம்பலமானது. காஜலுக்கு அவரது வீட்டில் வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டது. ஆனால் தனது காதலில் பிடிப்புடன் இருந்த அவர், காதலனுடன் சேர்ந்து வாழத் தான் முடியவில்லை, ஒன்றாக உயிரை மாய்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்துள்ளார். இந்த முடிவை சுமர் சிங்கிடம் கூறிய போது ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், பலமுறை காஜல் வற்புறுத்திய பின்னரே ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நொடிப் பொழுதில் படக்கென்று உயிர் பிரிய வேண்டும் என்பதற்காக இணையதளம் மூலம் சயனைடை சுமர் சிங் வாங்கியதாகவும், தாம் தங்க நகை வியாபாரம் செய்வதாகவும், தங்கத்தை கரைக்க தேவைப்படுவதாகவும் கூறி அதை அரை கிலோ அளவுக்கு அவர் ஆர்டர் செய்ததாகவும் போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சயனைடு கையில் கிடைத்தவுடன், கடந்த மாதம் 10ஆம் தேதி அந்த ஜோடி திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் அறை எடுத்தது. மறுநாள் குளிர்பானத்தில் சயனைடை கலந்து குடிக்க முடிவெடுத்திருந்தனர். திட்டமிட்டபடி, காஜல் சயனைடு கலந்த குளிர்பானத்தைக் குடித்து விட, இறுதி நேரத்தில் காதலன் சுமர் சிங்கின் மனம் மாறியது.

தற்கொலை முடிவில் பின் வாங்கிய அவர், சயனைடு கலந்த குளிர்பானத்தை குடிப்பது போல நடித்துள்ளார். இதைக் கவனித்த காதலி, இதுபற்றி கேட்ட போது சுமர் சிங் தனது வில்லத்தனத்தை அரங்கேற்றினார். எங்கே..இவள் உயிர் பிழைத்து விட்டால் உண்மையாகவே குளிர்பானத்தைக் குடிக்கச் சொல்வாளோ? என்ற பயத்தில் துப்பாட்டாவால் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டதாக சுமர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளார். விடுதி அறையில் போலீசார் சென்று பார்த்த போது வெட்டி வெட்டி இழுப்பது போல் நடித்து சுமர் சிங் ஏமாற்றியது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

சயனைடு பவுடரை குளிர்பானத்தில் கலந்த போதும், வாயருகே வைத்து குடிப்பது போல் நடித்த போதும் நெடி ஏறி நுரையீரல் வரை பரவிய காரணத்தால் தான்அவரும் தற்கொலைக்கு முயன்றிருப்பார் என்ற நம்பவேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும், போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். காதலியை கொலை செய்த சுமர் சிங்கை கைது செய்த திருவல்லிக்கேணி போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments