உச்சநீதிமன்ற உத்தரவின் படி கர்நாடகா சபாநாயகர் முன் 10 எம்.எல்.ஏ.க்கள் ஆஜர்

0 1437

உச்சநீதிமன்ற உத்தரவுபடி, மும்பைக்குச் சென்ற 10 எம்எல்ஏக்கள், கர்நாடக சபாநாயகர் முன் ஆஜராகினர். நாளைய சட்டப்பேரவை கூட்டத்தில் தவறாது பங்கேற்குமாறு, அதிருப்தி எம்எல்ஏக்கள் உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு கொறடா உத்தரவிட்டிருக்கிறார். 

கர்நாடகத்தில், முதலமைச்சர் H.D.குமாரசாமி தலைமையிலான, காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு, அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா முடிவால், எந்தநேரத்தில் கவிழும் நிலையில் உள்ளது. அதிருப்தி எம்எல்ஏக்கள் அளித்த ராஜினாமா கடிதங்களை, கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் ஏற்க மறுத்துவிட்டார். ராஜினாமா கடிதம் கொடுத்த அதிருப்தி காங்கிரஸ், மற்றும் மதச்சார்ப்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள், சிறப்பு விமானத்தில் சென்று, மும்பையில் உள்ள, ஆடம்பர நட்சத்திர விடுதியில், பலத்த பாதுகாப்புடன் தங்கியிருந்தனர். 

இந்நிலையில், அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேர், தங்கள் ராஜினாமா கடிதங்கள் மீது, சபாநாயகர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறு கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த மனுவை காலையில் விசாரித்த உச்சநீதிமன்றம், 10 எம்எல்ஏக்களும்  மாலை 6 மணிக்குள், கர்நாடக சபாநாயகர் முன் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டது. இவர்கள், ராஜினாமா செய்ய விரும்பினால், மீண்டும் ராஜினாமா கடிதம் கொடுக்குமாறும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தினர். எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதங்களை கொடுத்தால், அவற்றின் மீது இன்றே முடிவெடுத்து, உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறு, கர்நாடக சபாநாயகருக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

உச்சநீதிமன்றம் உத்தரவு வெளியான நிலையில், கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்தார். தன்னை உடனடியாக முடிவெடுக்குமாறு நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியாது என்றும், மேலும், தனது மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், கர்நாடக சபாநாயகர், கோரிக்கை விடுத்திருந்தார்.

கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் மனுவை, பிற்பகல் 2 மணிக்கு விசாரித்த உச்சநீதிமன்றம், இதனை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என மறுத்துவிட்டது. வழக்கைப் பட்டியலிட அனுமதிப்பதாக கூறிய உச்சநீதிமன்றம், 10 அதிருப்தி எம்எல்ஏக்கள் வழக்கோடு சேர்த்து விசாரிப்பதாகவும், உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, மும்பை நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த அதிருப்தி எம்எல்ஏக்கள், 2 சிறப்பு விமானங்களில், பெங்களூருவுக்கு வந்தடைந்தனர். பின்னர், பலத்த பாதுகாப்புடன், பெங்களூரு, கப்பன் பார்க் பகுதியில் அமைந்திருக்கும், கர்நாடக சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்தனர். அனைத்து அதிருப்தி எம்எல்ஏக்களும், புதிய ராஜினாமா கடிதங்களும், சபாநாயகர் ரமேஷ் குமார் முன்னிலையில், ஆஜராகினர். கர்நாடக சட்டப்பேரவை வளாகமான, பெங்களூரு விதான் சவுதா, உள்ளும், புறமும், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இதற்கிடையே, கர்நாடக சட்டப்பேரவை நாளை கூடவிருப்பதால், அனைத்து எம்எல்ஏக்களும், தவறாமல் ஆஜராக வேண்டும் என காங்கிரஸ் கொறடா கணேஷ் உத்தரவு பிறப்பித்திருக்கிறார். முக்கியமான நிதி மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்பதால், எவ்வித காரணங்களையும் கூறாமல், ஆஜராக வேண்டும் என காங்கிரஸ் கொறடா கணேஷ் உத்தரவிட்டிருக்கிறார். 

இதனிடையே, கர்நாடகா மற்றும் கோவா விவகாரங்களில் மத்திய பாஜக அரசின் போக்கை நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

பரபரப்பான சூழலுக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார், சட்டம் அனைவருக்கும் பொதுவானது என்றும், சட்டப்படியே முடிவெடுக்கப்படும் என்றும் கூறினார். தற்போது நடைபெறும் சம்பவங்களும், தன்னை குறித்து பத்திரிக்கைகளில் வந்த செய்திகளும், தனது மனதை மிகவும் வேதனைப்படுத்தியிருப்பதாக அவர் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலையில் யாரையும் நீக்குவதோ, பாதுகாப்பதோ எனது வேலையல்ல என்றும், ராஜினாமா கடிதங்கள் மீது, மின்னல் வேகத்தில் முடிவெடுக்க முடியாது என்றும், சபாநாயகர் கூறினார். கடந்த 6 ஆம் தேதி ராஜினாமா கடிதம் அளித்த எம்.எல்.ஏ.க்கள் யாரும், அது தொடர்பாக முன்கூட்டியே தன்னிடம் தகவல் அளிக்கவில்லை என்றும் விளக்கமளித்தார். 13 ராஜினாமா கடிதங்களில் 8 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் முறையாக இல்லை என்றும், கர்நாடக சபாநாயகர் ரமேஷ் குமார் கூறியிருக்கிறார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments