லாரி டிரைவர் அலட்சியம் விபத்தில் 3 பேர் பலி

0 735

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விதிகளை மீறி சாலை ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் இரு பெண்கள் உள்பட 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். உறங்குவதற்காக டிரைவர் விதிகளை மீறி லாரியை நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தியதே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது.

அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியைச் சேர்ந்த 6 பேர் கோவில்பட்டியில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க காரில் புறப்பட்டனர். காரை சுகன் என்ற பெண் ஓட்டியதாகக் கூறப்படுகிறது.

காரின் முன் பக்க இருக்கையில் ஒருவர் அமர்ந்து கொள்ள, பின் பக்க இருக்கையில் 4 பேர் அமர்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. காலை ஆறரை மணி அளவில், தூத்துக்குடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், துரைச்சாமிபுரம் என்ற இடத்தில் கார் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தது.

அப்போது கண்டெய்னர் ஏற்றிய லாரி ஒன்று சாலை ஓரம் நின்றிருந்தது. அந்த லாரியை, காரை ஓட்டி வந்த பெண்ணான சுகன் அருகில் வந்த பிறகே கவனித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் பதற்றம் அடையவே, சில நொடிகளில் லாரியின் பின் பக்கம் கார் மோதி சிதைந்தது.

மோதிய வேகத்தில் காரின் பின்பக்கத்தில் இருந்த சரோஜா எனும் பெண் சாலையில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார். ராஜாராம், ராஜம்மாள் ஆகியோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். சுகன், செல்வலட்சுமி, ராஜ்குமார் ஆகியோர் படுகாயமுற்று எட்டயபுரம் அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கண்டெய்னர் ஏற்றிய லாரியின் ஓட்டுநர் உறங்குவதற்காக, அந்த இடத்தில் லாரியை நிறுத்தியதே விபத்துக்குக் காரணம் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

ஓய்வெடுப்பதற்கென்று சுங்கச்சாவடி அருகே இடம் இருக்கும் போது, விபத்து, பழுது போன்ற தவிர்க்க முடியாத காரணங்கள் ஏதுமின்றி லாரி நெடுஞ்சாலை ஓரம் நிறுத்தப்பட்டதே கோர விபத்துக்கு காரணமாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதேவேளையில் சுகன் என்ற பெண் தற்போது தான் கார் ஓட்டிப் பழகுவதாகவும், பயிற்சி பெறும் ஓட்டுநரான அவர் பதற்றம் அடைந்ததால் லாரி மீது மோதி இருக்கலாம் என்று போலீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறமிருக்க சாலையின் நடுவிலும், ஓரத்திலும் போடப்பட்டிருக்கும் வெள்ளை நிறக் கோடு, குறிப்பிட்ட தூரத்திற்கு அந்தச் சாலையில் அழிந்து காணப்படுகிறது.

இடது பக்கம் வெள்ளை நிறக் கோடுகள் தெளிவாக தெரியும்படி போடப்பட்டிருந்தால், அதை தொடர்ந்து சென்று இருந்தால் கார் விபத்தில் சிக்கி இருக்காது என்றும் சொல்கிறார்கள்.

எனவே, சாலையை பராமரிப்பதில் சுங்கச்சாவடி நிர்வாகம் காட்டிய அலட்சியத்தால் 3 உயிர்கள் பலியானதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments