ராஜினாமா கடிதம் கொடுத்த கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும் சபாநாயகர் முன்பு ஆஜராக உத்தரவு

0 909

கர்நாடகத்தில் அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ள, ஆளுங்கூட்டணியை சேர்ந்த அதிருப்தி எம்எல்ஏக்கள் 10 பேரும் இன்று மாலை 6 மணிக்கு சபாநாயகர் முன்பு ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் ராஜினாமாவை வலியுறுத்தினால் அதன் மீது முடிவெடுக்குமாறும் சபாநாயகர் ரமேஷ்குமாரை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

கர்நாடகத்தில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு, முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. இந்த கூட்டணி சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா கடிதம் கொடுத்ததாலும், 2 சுயேச்சைகள் ஆதரவை வாபஸ் பெற்றதாலும், அரசு கவிழும் நிலையில் உள்ளது. ஆனால் எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்காததால் கர்நாடகத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், முதன் முதலில் ராஜினாமா கடிதம் கொடுத்துவிட்டு, மும்பை சென்று தங்கிய காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்கள் 10 பேர், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். தங்களது ராஜினாமா கடிதத்தின் மீது சபாநாயகர் வேண்டுமென்றே முடிவெடுக்காமல் இருப்பதாக அவர்கள் மனுவில் கூறியிருந்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 10 எம்எல்ஏக்களும் இன்று மாலை 6 மணிக்கு சபாநாயகரை சந்திக்க உத்தரவிட்டது.

அவர்கள் ராஜினாமா செய்வது என விரும்பினால் மீண்டும் சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுக்குமாறு அறிவுறுத்திய நீதிபதிகள், 10 எம்எல்ஏக்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்குமாறு கர்நாடக டிஜிபிக்கு ஆணையிட்டனர். சபாநாயகரும் எம்எல்ஏக்களை அனுமதித்து, அவர்கள் கூறுவதை கேட்டு, இன்றே முடிவெடுத்து உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்குமாறும் நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

இதற்கிடையே, கர்நாடக சட்டப்பேரவை சபாநாயகர் ரமேஷ் குமார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் மனுவில், தன்னை உடனடியாக முடிவெடுக்குமாறு, நீதிமன்றத்தால் கட்டாயப்படுத்த முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், அதிருப்தி எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்கள் மீது உடனடியாக முடிவெடுக்க உத்தரவிட்டதை ஒத்திவைக்க வேண்டும் உச்சநீதிமன்றத்தை கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், கர்நாடக சபாநாயகர், கோரிக்கை விடுத்திருந்தார். 

இதனிடையே, கர்நாடகா மற்றும் கோவா விவகாரங்களில் மத்திய பாஜக அரசின் போக்கை நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் போராட்டத்தில் ஈடுபட்டது. காந்தி சிலை முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments