சிறை தான் எனக்கு வீடு..! சோற்றுக்காக சிறை சென்ற திருடன்..!

0 735

வீட்டு சாப்பாட்டை விட சிறை சாப்பாடுதான் ருசியாக உள்ளது என்பதால் திருடி விட்டு, மாட்டிக் கொண்ட திருடனை, தாம்பரத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சிறை சாப்பாட்டு ருசிக்கு அடிமையான வினோத திருடன் இப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.

ரவுடியாக தங்களை காட்டிக் கொள்ள வடிவேலு போல சிறைக்கு செல்வோர் மத்தியில், ஒரு திருடன், சிறை சாப்பாட்டு ருசிக்காவே சில்லறை திருட்டை செய்து மீண்டும் சிறைக்கு சென்று உள்ளான். சென்னையை அடுத்த தாம்பரத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் இருந்து முதியவர் ஒருவர் பெட்ரோலை திருடுவதை கண்டதும், அவரை மடக்கிப் பிடித்தனர்.

பெட்ரோல் திருடுவது குறித்து போலீசார் விசாரித்த போது, திருட்டில் ஈடுபட்டவர் பெருங்களத்தூர் சடகோபன் நகரைச் சேர்ந்த ஞானபிரகாசம் என்பது தெரியவந்தது. ஏற்கனவே இரு மாதங்களுக்கு முன்பு தாம்பரத்தில் கண்காணிப்பு கேமிராக்களை திருடிய வழக்கில் ஞானபிரகாசத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருந்தனர்.

கடந்த மாதம் 29-ஆம் தேதி தான் புழல் சிறையில் இருந்து ஞானபிரகாசம் விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் மீண்டும் திருடியது ஏன் என போலீசார் விசாரித்தனர்.

இதற்கு ஞானபிரகாசம் சொன்ன பதில் போலீசாரையே சிரிக்க வைத்து விட்டது. சின்ன, சின்ன வேலை பார்த்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு காலம் தள்ளுவதால் ஞானபிரகாசத்தை அவரது வீட்டில் யாரும் மதிப்பதில்லை.

அவருக்கு சரியாக சாப்பாடும் போடுவதில்லை. இதனால் வெறுத்துப் போன அவர், சில மாதங்களுக்கு முன்பு கண்காணிப்பு கேமிராவை திருடிய வழக்கில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையில் மாமியார் வீடு போல, வேளை தவறாமல் சுடச்சுட சாப்பாடு போடப்பட்டது. வீட்டில் கிடைக்காத ருசியான சாப்பாட்டு சிறையில் கிடைத்த தால் ஞானபிரகாசம் அந்த உணவின் சுவைக்கு அடிமையாகி போனார். இந்த நிலையில் விடுதலையான அவருக்கு வீட்டுச் சாப்பாட்டு சரிபட்டு வரவில்லை.

மீண்டும் சிறை சாப்பாடே சாப்பிட வேண்டுமென்ற ஆசை தலை தூக்கியது. இதனால் எதையாவது திருடி விட்டு சிக்கினால் சிறைக்கு அனுப்பி விடுவார்கள் என்று கணக்கு போட்ட ஞானபிரகாசம், கடந்த 30-ஆம் தேதி தாம்பரத்தைச் சேர்ந்த விக்னேசுவரன் என்பவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தைத் திருடிச் சென்றார்.

அந்த வாகனத்திலேயே ஊரெல்லாம் சுற்றித் திரிந்த ஞானபிரகாசம், பெட்ரோல் தீர்ந்து போனதால், வேறு ஒரு வாகனத்தில் இருந்து பெட்ரோலை திருடிய போது சிக்கிக் கொண்டார்.

இதனிடையே இருசக்கர வாகனத்தை பறி கொடுத்த விக்னேசுவரன் கொடுத்த புகாரின் பேரில் ஞானபிரகாசத்தை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நாக்கிற்கு ருசியான சாப்பாடு கிடைக்கும் தைரியத்தில் ஞானபிரகாசம் இப்போது உற்சாகமாக சிறைக்கு சென்றுள்ளார். மனிதர்கள் பல விதம், இதில் ஞானபிரகாசம் ஒரு விதம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments