காதலன் ஏமாற்றியதால் தற்கொலைக்கு முயன்ற காதலி உயிரிழப்பு

0 2295

எல்லைப்பாதுகாப்பு படையில் பணியாற்றுபவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி ஏமாற்றியதால், தற்கொலைக்கு முயன்ற காதலி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே வெங்கத்தூர் காலனியை சேர்ந்தவர் கவுசல்யா. பி.ஏ பட்டதாரியான அவரும், அதே பகுதியை சேர்ந்த இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி வரும் பிரபு என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

அந்த சமயங்களில் காதலன் பிரபு திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கவுசல்யாவுடன் பலமுறை நெருக்கமாக இருந்ததாகவும், அந்த பெண் கர்ப்பமானதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் கவுசல்யாவை திருமணம் செய்து கொள்ள முடியாது என, பிரபு திடீரென மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கவுசல்யா, கடந்த மாதம் 25ம் தேதி எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் அவரை மீட்ட உறவினர்கள், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக கவுசல்யா அனுமதிக்கப்பட்டார்.

இதனிடையே பெண்ணின் தற்கொலை முயற்சி குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கவுசல்யாவிடம் பெற்ற வாக்கு மூலத்தின் அடிப்படையில், பிரபு மீது ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்தனர். இதனை அறிந்த பிரபு கடந்த 3ம் தேதி திண்டிவனம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், சரணடைந்து ஜாமீன் பெற்றார்.

இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கவுசல்யா, சிகிச்சை பலனின்றி கடந்த 4ம் தேதி உயிரிழந்தார். உடற்கூறாய்வு முடிந்து கவுசல்யாவின் உடல், வெள்ளிக்கிழமை சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

இதனிடையே காதலன் பிரபு ஜாமீன் பெற்றதை அறிந்த பெண்ணின் உறவினர்கள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், காதலன் பிரபுவை கைது செய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் நடவடிக்கை எடுக்கும் வரை பெண்ணின் சடலத்தை அடக்கம் செய்யப் போவதில்லை எனவும் கூறினர். தகவலறிந்து வந்த பெரியதச்சூர் போலீசார் மற்றும் விழுப்புரம் பயிற்சி டிஎஸ்பி பார்த்திபன் ஆகியோர் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

மேலும் பிரபு ஊரில் இல்லாததால் அவரது தந்தை சேகரை கைது செய்த போலீசார், பிரபு மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்தனர்.

இதனால் சமாதானமடைந்த கவுசல்யாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். கவுசல்யாவின் இறுதி ஊர்வலம் நடைபெறும் நிலையில், பதற்றம் நிலவுவதால் வெங்கத்தூர் பகுதியில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments