குழந்தையற்ற குஜராத் தம்பதியருக்கு நேர்ந்த சோகம்..!

0 7220

குஜராத்தைச் சேர்ந்த குழந்தையற்ற தம்பதியர், தாங்கள் மகனாக எண்ணி வளர்த்து வந்த பூனைக்குட்டியை ரேணிகுண்டா ரயில்நிலையத்தில் தவற விட்டு, கடந்த 20 நாட்களாக அதனைத் தேடி அலைந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த ஜியாஸ் பாய் - மீனா தம்பதியருக்கு திருமணமாகி 17 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை. ஓராண்டுக்கு முன் பூனைக்குட்டி ஒன்றை வாங்கிய தம்பதியர் அதற்கு பாபு எனப் பெயரிட்டு தங்கள் குழந்தையைப் போல் வளர்த்து வந்துள்ளனர்.

எங்கு சென்றாலும் அந்தப் பூனையோடு செல்லும் தம்பதியர், கடந்த மாதம் 9ஆம் தேதி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்துள்ளனர். பொதுவாக திருமலை கோவிலுக்குள் செல்பவர்களுக்கு வளர்ப்புப் பிராணிகளை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்ற நிலையில், அதனையும் மீறி குஜராத் தம்பதியர் எடுத்துச் சென்றுள்ளனர்.

ஏழுமலையானை தரிசித்துவிட்டு கிளம்பிய தம்பதி, 13ஆம் தேதியன்று ரேணிகுண்டா ரயில்நிலையத்தில் குஜராத் செல்லும் ரயிலுக்காக காத்திருந்துள்ளனர். அப்போது அவர்களுடைய பூனைக்குட்டி பாபு மாயமாகி இருக்கிறது.

அதிர்ச்சியடைந்த இருவரும் பூனைக்குட்டியுடன் எடுத்துக்கொண்ட படத்தை பார்ப்பவர்களிடம் எல்லாம் காட்டி பூனை குறித்து விசாரித்து வந்துள்ளனர். போலீசாரிடமும் புகாரளித்துவிட்டு கடந்த 20 நாட்களாக அவர்கள் தங்கள் பாபுவைத் தேடி அலைந்துள்ளனர்.

இதற்கிடையே விஷமிகள் சிலர் பூனையை கண்டுபிடித்துத் தருவதாகக் கூறி குஜராத் தம்பதியரிடமிருந்து பணத்தையும் ஏமாற்றி பறித்துச் சென்றுள்ளனர்.

தெருத்தெருவாக பூனைத் தேடி அலைந்த இருவரையும் டாக்ஸி ஓட்டுநர்கள் முதல் போலீசார் வரை சமாதானம் செய்து வெள்ளிக்கிழமை மாலை குஜராத் ரயிலில் ஏற்றி அனுப்பிவைத்தனர்.

குழந்தையற்றவர்களுக்கான குழந்தையாக வளர்ந்த பூனைக்குட்டியின் நினைவுகளோடே தம்பதியர் குஜராத் நோக்கி பயணப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments