அரசுப் பள்ளி மாணவர்களின் நுண்கலைத் திறன்

0 579

யற்கையின் கொடையான தென்னை, பனை மட்டைகளில் நுண்கலைமிக்க கைவினை பொருட்களை செய்து அசத்தி வரும் புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவர்களின் திறனை ஊக்குவித்து அவர்களை இயற்கையோடு ஒன்ற செய்து வருகிறார் நுண்கலை ஆசிரியர் ஒருவர்..

தமிழர்களின் வாழ்வோடு ஒன்றி வருவது இயற்கையின் கொடையாக இருக்கும் தென்னை, பனை மரங்களை வளர்ப்பதை மக்கள் தலைமுறை உழைப்பாக கருதி வருகின்றனர்.

தென்னையில் தவிர்ப்பதற்கு என எதுவும் இல்லாததால், பண்டைக்கால மக்கள் தென்னை மரக்கன்றுகளை வீடுகளில் நட்டு குழந்தைகளில் ஒன்றை போல் கருதி வந்தனர். ஆனால், நாகரிக வளர்ச்சி, மக்கள் தொகை பெருக்கம் காரணமாக இவ்வகை மரங்களை காண்பது அரிதாகியுள்ளது. இருப்பினும் கிராமபுறங்களிலுள்ள இந்த அரிய செல்வத்தை பலரும் பயன்படுத்தி தான் வருகிறார்கள்.

தென்னையின் ஒரு பாகமான, காய்ந்த மட்டையில் விதவிதமான வாகனங்கள், கலை நயமிக்க பொருட்களை உருவாக்கியுள்ளனர் இந்த அரசுப் பள்ளி மாணவர்கள்..

புதுச்சேரி சேலியமேடு பகுதியில் அமைந்துள்ள கவிஞரேறு வாணிதாசன் அரசு உயர்நிலை பள்ளியின் நுண்கலை ஆசிரியர் உமாபதி தான், இதுபோன்ற செயல்களில் மாணவர்களை ஈடுபடுத்தி வருகிறார். பள்ளியில் இதற்கென ஒரு தனி அறை ஏற்படுத்தப்பட்டு, கலைநயம் மற்றும் ஆர்வத்துடன் வரும் மாணவர்களுக்கு கைவினை பொருட்களுக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்படுகின்றன.

இயற்கையின் கொடையான பனைஓலை, பாக்கு மட்டை, தென்னங்கீற்று, சிரட்டை ஆகியவற்றை கொண்டு மாணவர்கள் தங்களது மனதில் தோன்றும் படைப்புகளுக்கு வடிவம் கொடுக்கவும் ஆசிரியர் பயிற்சி கொடுக்கிறார். மாணவர்களை இயற்கையுடன் இணைப்பது தனக்கு மனமகிழ்ச்சியையும், திருப்தியையும் தருவதாக உமாபதி தெரிவிக்கிறார்.

 

தங்களது கலை திறனால் பிஞ்சு கரங்களை கொண்டு, சுத்தியல்களை பிடித்தபடி அழகிய படைப்புகளை உருவாக்கி வரும் மாணவர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் பொம்மை, தெய்வ சிலைகள், போர் வீரர்கள், பாரம்பரிய விளையாட்டு உபகரணங்கள், விலங்குகள், மயில், மோட்டார் சைக்கிள்கள், பண்டைய கால சாரட், ஆட்டோ ரிக் ஷா, ராணிகளை தூக்கி செல்லும் பல்லக்கு உள்பட 500க்கு மேற்பட்ட கைவினை கலை பொருட்களை உருவாக்கியுள்ளனர்.

பள்ளி வகுப்பு நேரம் தவிர்த்து ஆர்வத்துடன் இதுபோன்ற கலை வடிவங்களை உருவாக்க நேரம் செலவிடும் மாணவர்கள், தங்களது படைப்புகளை பள்ளி நிர்வாகம் அங்கீகரித்து, கண்காட்சி மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் கலை பொருட்கள் மூலம் தங்களுக்கு கிடைக்கும் பணத்தை அஞ்சலகத்தில், சிறுசேமிப்பு திட்டத்தின் கீழ் சேமித்து வைப்பதாகவும் கூறுகின்றனர். மாணவர்களை கொண்டு கைவினை பொருட்களை உருவாக்குவது மட்டுமல்லாது, அவர்களை பிற பள்ளி மாணவர்கள் முன்பு சாதனையாளர்களாக நிறுத்தவும், இப்பள்ளி தீவிரம் காட்டுகிறது.

"அழிவின் உயிர்ப்பு" என்ற தலைப்பிலேயே உருவங்களை உருவாக்கி அதற்கு உயிர் தரும் மாணவர்களின் இந்த படைப்புகளால் கவரப்பட்ட பிற மாணவர்களும் விடுமுறை நாட்களில் பள்ளியில் நுண்கலையை கற்று செல்கின்றனர்.

அழிவின் விளிம்பில் இருக்கும் நமது பாரம்பரிய தென்னை , பனை மரத்தின் பயன் ஏராளம். அதனை இப்படியும் பயன்படுத்தலாம் என்று கலைப்பொருளாக்கி நம்மையும், வியக்க வைக்கும் மாணவர்களின் திறமை பாராட்டுதலுக்கு மட்டுமன்றி பின்பற்றவும் தகுந்தது..

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments