மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை செவிலியர் மீது தாக்குதல்..!

0 575

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க தாமதமானதால் பெண் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் செவிலியரைத் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே குட்டையூரைச் சேர்ந்த ருக்மணியும் அவரது கணவர் ராஜனும் இருசக்கர வாகனத்தில் சென்ற போது நேற்றிரவு விபத்தில் சிக்கினர். லாரி மோதி தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்த ருக்மணி
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சிகிச்சை அளிக்க தாமதமான காரணத்தால் தான் ருக்மணி உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டிய உறவினர்கள், ஆத்திரத்தில் செவிலியரைத் தாக்கினர்.

மேலும் சிகிச்சை அறையில் இருந்த பொருட்களை வீசி எறிந்தும் வன்முறையில் ஈடுபட்டனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.

மருத்துவமனை கதவுகளின் கண்ணாடிகளையும் அவர்கள் உடைத்ததாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மருத்துவமனை முன் உறவினர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இதனிடையே, செவிலியரைத் தாக்கியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, அந்த மருத்துவமனையில் அனைத்து செவிலியர்களும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்து தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தாக்குதல் குறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் போலீசில் புகார் அளித்ததை அடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை முன்பு செவிலியர்களும், மருத்துவர்களும் இன்று சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments